அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மதசார்பற்ற நாடு என்ற பெயர் உலக அளவில் இந்தியாவுக்கு உண்டு. ஏராளமான மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தனிச்சிறப்பாகும். ஆனால் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் மத கலவரங்கள் உலக அளவில் நமது நாட்டுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் இந்தியாவில் இன்னும் மத ஒற்றுமை சாகவில்லை என்பதற்கு அடையாளமாக சில சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் அப்படி நடந்த ஒரு சம்பவம் தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குவைத் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளியின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழை தொழிலாளி ஆதிமுத்து கடந்த 4 வருடங்களுக்கு முன் பிழைப்பு தேடி குவைத் சென்றார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

அவர் வேலை பார்த்த நிறுவனத்திற்கு சிறிது தொலைவில் தொழிலாளர்கள் தங்கும் முகாமில் ஆத்திமுத்து தங்கியிருந்தார். அதே முகாமில் தான் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்த அப்துல் சாஜித்தும் தங்கியிருந்தார். அவரும் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வயதான பெற்றோர், மனைவி மற்றும் 11 வயது மகளை விட்டு குவைத்துக்கு வந்திருந்தார். ஆதிமுத்துவும், சாஜித்தும் நண்பர்களானார்கள். இந்த நிலையில் தான் விதி இருவரது வாழ்க்கையிலும் விளையாடியது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு வியாழக்கிழமை இரவில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது இருவருக்கும் இடையே சாதாரணமாக தொடங்கிய வாக்குவாதம் திடீரென கைகலப்பானது. ஆத்திரத்தில் ஆதிமுத்து அங்கிருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து சாஜித்தின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.

குவைத் போலீஸ் ஆதிமுத்துவை கொலை வழக்கில் கைது செய்தனர். கடந்த 4 வருடங்களாக அவர் மரணத்தை காத்து சிறையில் உள்ளார். குவைத் சட்டப்படி கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கும். இதை அறிந்த ஆத்திமுத்துவின் மனைவி மாலதி தனது கணவனை எப்படியாவாது காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் கடந்த சில வாரங்களுக்கு முன் மலப்புரம் சென்று சாஜித்தின் மனைவி மற்றும் உறவினர்களை சந்தித்தார். அங்கு சென்ற பின்னர் தான் தன்னை விட சாஜித்தின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பது மாலதிக்கு தெரியவந்தது. சாஜித்தின் வருமானத்தை வைத்துத்தான் அவரது வயதான பெற்றோரும், மனைவியும், மகளும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு சொந்த வீடும் கிடையாது. சாஜித்தை மட்டுமே நம்பிருந்த தங்களால் இனி எப்படி வாழ முடியும் என மாலதியிடம் கேட்டு அவர்கள் கதறி அழுதனர்.

இதனால் அந்த குடும்பத்தினரிடமிருந்து தனது கணவனுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடைக்காது என்று தான் மாலதி கருதினார். ஆனால் அந்த வறுமையிலும் சாஜித்தை கொலை செய்த ஆதிமுத்துவுக்கு மன்னிப்பு கொடுக்க அவர்கள் தயாரானார்கள். எஞ்சியுள்ள தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு ₹30 லட்சம் தருவதாக இருந்தால் ஆதிமுத்துவுக்கு மன்னிப்பு தருவதாக சாஜித்தின் குடும்பத்தினர் கூறினர். அது பெரிய தொகை தான் என்றாலும் தனது கணவனுக்காக பணத்தை எப்படியாவது புரட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாலதி ஊர் திரும்பினார். ஆனால் தனது நகை உட்பட அனைத்தையும் விற்றும் மாலதியால் 5 லட்சத்தை மட்டுமே திரட்ட முடிந்தது.

அந்தப் பணத்தால் எந்த பலனும் இல்லை என்றாலும் நம்பிக்கையை கைவிடாமல் அவர் மீண்டும் சாஜித்தின் குடும்பத்தினரை சந்திக்க சென்றார். ஆனால் 30 லட்சம் கிடைத்தால் தான் தனது குடும்பத்தை சிரமமில்லாமல் கொண்டு செல்ல முடியும், தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர்கள் கைவிரித்தனர். ஆனாலும் மனம் தளராத மாலதி, அங்கிருந்த சிலரின் யோசனைப்படி மலப்புரம் பாணக்காட்டுக்கு சென்று முஸ்லிம் லீக் தலைவர் முனவரலி சிகாப்பை சந்தித்து விவரத்தைக் கூறி அழுதார். மாலதியின் நிலைமை குறித்து அறிந்த முனவரலி மீதமுள்ள 25 லட்சத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும், 2 வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பிறகு தான் மாலதிக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் தனக்காக 25 லட்சம் ரூபாயை யார் தருவார்கள் என்று தான் அவர் கருதினார். ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாகவே பாணக்காடு முனவரலியிடமிருந்து மாலதிக்கு அழைப்பு வந்தது. 25 லட்சம் பணம் தயாராக இருப்பதாகவும் உடனே வந்து வாங்கிக் கொள்ளுமாறும் அவர் கூறினார். அதை கேட்ட மாலதி, தனது தந்தை துரைராஜையும் அழைத்துக் கொண்டு பாணக்காட்டுக்கு புறப்பட்டார். அங்கு முஸ்லிம் லீக் தலைவர் முனவரலி சிகாப் தங்கள், ₹25 லட்சத்திற்கான காசோலையை மாலதியிடம் கொடுத்தார். மாலதிக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த முனவரலி, அடுத்த நிமிடமே தனக்கு தெரிந்தவர்களை அணுகி மாலதிக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

அடுத்த ஒரு சில நாட்களிலேயே கேரளா மற்றும் அரபு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் தொடங்கி தொழிலதிபர்கள் வரை பலரும் பணம் அனுப்பியுள்ளனர். ஒரு சில நாட்களிலேயே 25 லட்சம் கிடைத்தது. அதை மாலதியிடம் முனவரலி கொடுத்து, தான் சொன்ன வாக்கை காப்பாற்றினார். மேலும் மாலதி வருவதற்கு முன்பே சாஜித்தின் குடும்பத்தினரிடம் பணத்தை சேகரித்த விவரத்தைக் கூறி ஆதிமுத்துவுக்கான மன்னிப்பு கடிதத்தையும் வாங்கி தயாராக வைத்திருந்தார்.அந்தக் கடிதத்தை இந்திய தூதரகம் வழியாக குவைத் அரசுக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக ஆதிமுத்துவுக்கு விடுதலை கிடைக்கும்.    

நன்றி: தினகரன் (03-12-2017)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-