அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நாகர்கோவில்: மொத்தத்தில் 41 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் கார்கோ வழியாக பார்சல் அனுப்புகின்ற வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களையும் ஜிஎஸ்டி கடுமையாக பாதித்துள்ளது. பார்சல் அனுப்புவது 90 சதவீதம் சரிந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதன் பலன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்காத நிலையில் பாதிப்புகளையே மக்கள் அதிகம் அனுபவித்து வருகின்றனர். இது இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இந்திய தொழிலாளர்களையும் பாதித்துள்ளது. இந்தியாவில் இருந்து சுமார் 2.5 கோடி மக்கள் வெளிநாடுகளில் பணி புரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் உடலுழைப்பு சார்ந்த கட்டுமானம், மீன்பிடித்தலில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.18 ஆயிரத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இதன் வாயிலாக இந்தியாவுக்கு ஆண்டுக்கு 7,100 கோடி டாலர் பணப் பரிவர்த்தனை மூலமாக வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலம் 800 கோடி டாலர் பணம் வருகிறது.

மேலும் வெளிநாடு சென்றவர்கள் திரும்பி வரும்போது தங்களுடன் எடுத்து வருகின்ற பொருட்களின் அளவு விமானங்களில் அதிகபட்சம் 20 கிலோ முதல் 30 கிலோ வரை மட்டுமே கொண்டுவர முடியும். அதற்கு அதிகமாக பொருட்கள் கொண்டு வருகின்றவர்களுக்கு கிலோவிற்கு ரூ.600 வரை கூடுதலாக செலுத்த வேண்டிவரும். அதே வேளையில் கார்கோ ஏஜென்சிகள் வழியாக கூரியர் போன்று அனுப்புகின்ற பொருட்களுக்கு 20 கிலோ வரை கட்டணமாக ரூ.200 மட்டுமே வசூலிக்கப்பட்டது.ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மொத்தம் 41 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் பார்சல் அனுப்புவது 90 சதவீதம் குறைந்துவிட்டது. இதுவே சரிவுக்கு காரணம் ஆகும். 28 சதவீதம் ஜிஎஸ்டி, 10 சதவீதம் அடிப்படை சுங்க கட்டணம், 3 சதவீதம் செஸ் வரியும் சேர்த்து 41 சதவீதம் கட்டணமாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளான பொருட்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த வரி சலுகை கடந்த ஜூன் 30ம் தேதி முற்றிலும் விலக்கப்பட்டது. கார்கோ வழி அனுப்பப்படுகின்ற பார்சல்களுக்கு கடந்த 24 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்டு வந்த வரிச்சலுகைதான் முன்னறிவிப்பு ஏதுமின்றி சிறப்பு உத்தரவின் வாயிலாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த 1993ம் ஆண்டு முதல் மத்திய அரசு வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்சல்கள் அனுப்ப வரிச்சலுகை வழங்கி இருந்தது. முதலில் ரூ.5 ஆயிரம் வரையுள்ள பார்சல்களுக்கு வரிசலுகை வழங்கப்பட்ட நிலையில் 2010ல் இது ரூ.10 ஆயிரம் ஆகவும், 2016ல் ரூ.20 ஆயிரம் ஆகவும் வரிச்சலுகை வரம்பு உயர்த்தப்பட்டது. இந்த சலுகையைத்தான் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி விமான நிலையங்கள் வழியாக அங்கீகரிக்கப்பட்ட கூரியர் நிறுவனங்கள் வழியாக வெளிநாடுகளில் வசிக்கின்ற தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்ற பார்சல்கள் வந்து சேருகின்றன. முன்பு வெளிநாடுகளில் இருந்து தினசரி 1100 முதல் 1500 வரை பார்சல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது தினசரி 95 முதல் 105 பார்சல்களாக குறைந்துள்ளது. மேலும் ஜூன் 30ம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்களும் பெற்றுக்கொள்ள 41 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் அவை திரும்ப பெறப்படாமல் விமான நிலையங்களில் தேங்கி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் வசிக்கின்றவர்கள் இந்தியாவுக்கு பார்சல்கள் அனுப்பும்போது ஏற்கனவே வழங்கி வந்த வரிச்சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-