அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


எச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மாயமானவர் மீண்டார் !குறிப்பு: இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட சகோதரரின் தனியுரிமை, மனஅமைதி கருதி அனைத்து சுயவிபரங்களும் மறைக்கப்பட்டு, ஆசுவாசத்திற்காக சற்று ஆறப்போட்டு சம்பவம் மட்டும் விழிப்புணர்வுக்காக பகிரப்படுகிறது.

விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தைபடுவதை போல இந்த செய்தி நெருங்கிய வட்டத்திற்குள் மட்டும் கசியத் துவங்கியது முதல் அனைவருக்கும் ஒருவித படபடப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அவரது உறவினர்களுக்கும், தாயகத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கூட சம்பவம் என்னவென்று தெரியாமல், எதையும் ஊர்ஜிதம் செய்து கொள்ளாமல் எந்தச் தகவலையும் சொல்ல முடியாமல் ஒழித்து கொண்டு அறிந்தோர் மனங்களில் ஒரு பெரும் மல்லுக்கட்டு.

அவர் புதியவரல்ல, சுமார் 15 வருடங்களாக அமீரகத்தின் துபை மற்றும் அபுதாபியில் பணியாற்றும் அந்த சகோதரர் நல்லவர், வல்லவர், படித்தவர், பண்பாளர், அனுபவஸ்தர் என பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் என்பதும், அபுதாபி போன்ற நகரங்களில் இதுபோல் நடக்க வாய்ப்பேயில்லையே என்பதும் வியப்பின் உச்சம்.

விஷயம் இதுதான், சம்பந்தப்பட்ட சகோதரர் தாயகத்திலிருந்து இரவில் பயணம் செய்த அலுப்புடன் துபை விமானத்தில் வந்திறங்கி அபுதாபிக்கு வருகிறார். வந்தவர் நேராக தன்னுடைய பிளாட்டுக்குச் சென்று உடமைகளையும், உடைகளையும் களைந்து மாற்றிக் கொண்டு தன்னுடைய ரூம்மேட்டிடம் கீழே போய் 'டீ' குடித்துவிட்டு மதிய சமையலுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிவருவதாக சொல்லிச் சென்றவர்... சென்றவர்தான்... அதற்குப்பின் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை மாறாக அவருடைய மொபைல் மட்டும் எடுத்து பதில் பேச ஆளின்றி 2 நாட்கள் இயங்கிக் கொண்டிருந்தது.

மாயமாகி ஒருநாள் கழிந்துவிட்ட நிலையில் 2 ஆம் நாள் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தகவல் சொல்லப்பட்டு பி.ஆர்.ஓ மூலம் போலீஸாரிடம் புகார் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு விபரீத கற்பனைகளுடன் திக் திக் என கழிந்த 48 மணிநேரங்களுக்குப் பின் மர்மமாய் மாயமானவர் 2000 திர்ஹம் அபராதம் கட்டிவிட்டு அபுதாபி நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து நெஞ்சங்களில் பால் வார்த்தார்.

காரணம் இதுதான், அவசரமாக பயணக்களைப்புடன் 'டீ' குடிக்க வந்தவரிடம் அபுதாபி சிஐடி ஒருவர் பத்தாக்கா (அடையாள அட்டை, எமிரேட்ஸ் ஐடி, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒன்று) கேட்டுள்ளார். தற்போது தான் தாயகத்திலிருந்து வந்ததாகவும், ரூமில் இருப்பதாகவும் எடுத்து வருவதாகவும் அல்லது உடன் வந்தால் எடுத்து தருவதாகவும் சொன்ன எதையும் அல்லது போன் அடித்துச் சொன்னால் தனது ரூம்மேட் கொண்டு வந்துவிடுவார் என்று சொன்னதையோ கேட்கத் தயாரில்லை அந்த சிஐடி அதிகாரி.

அந்த சிஐடி அதிகாரி இறுதியாக, பத்தாக்கா இல்லாமல் வந்த குற்றத்திற்காக சட்டப்படி 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறேன், நீதிபதியின் தீர்ப்பே இறுதியான என அவர் சொல்லியதே அந்த 2 நாட்களும் சகோதரன் மர்மமாய் மாயமானதன் பின்னனி.

வெளியே இருந்தவர்களின் மனநிலையை விடுங்கள். உள்ளே இருந்த அந்த சகோதரனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எனவே, அடையாள அட்டைகள் இன்றி வெளியே செல்லாதீர்;. ஏனென்றால் ஒரே மனநிலையில் அனைத்து சிஐடிகளும் வருவதில்லை, அவர்களில் கறாரும் உண்டு, கருணையும் உண்டு.

தகவல்: அதிரை அமீன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-