அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே செயல்படும் காரை வட்டார மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, கிராம மக்கள் நடத்திய போராட்டத்தால் இடமாற்ற முயற்சி கைவிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட காரை கிராமத்தில் 30 படுக்கை வசதிகளுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த டிசம்பர் மாதம் வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இதனிடையே, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி அளிக்க வேண்டுமானால், திருச்சி அல்லது பெரம்பலூருக்கு செல்லும் நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்ட மாவட்ட நிர்வாகம், காரை கிராமத்தில் செயல்படும் வட்டார மருத்துவமனையை பாடாலூருக்கு இடமாற்ற முடிவு செய்து அதற்கான ஆணையை வழங்கியுள்ளது. இதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கின.
இதன் முதல்கட்டமாக காரை வட்டார மருத்துவமனையிலிருந்து சில படுக்கைகள் மற்றும் தளவாட பொருள்களை மருத்துவத் துறையினர் எடுத்துச்சென்றதோடு, பணியிலிருந்த மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
இதையறிந்த காரை மற்றும் புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் வட்டார மருத்துவமனைக்கு சென்று இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டார மருத்துவமனையை, பெரம்பலூர் ஆட்சியரகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் காரை வட்டார மருத்துவமனையை பாடாலூருக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி, காரை மற்றும் புதுக்குறிச்சி, மலையப்பநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காரை கிராமத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதோடு, உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன், வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் போலீஸார் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இடமாற்றம் செய்வது கைவிடப்படும். காரை வட்டார மருத்துவமனையாக முழுமையாக செயல்படும். இங்கிருந்து எடுத்துச் சென்ற தளவாடப் பொருள்களும், படுக்கைகளும் காரை வட்டார மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும், மேலும், மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தால் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பாடாலூரில் வட்டார மருத்துவமனை கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-