அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நாட்டில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கவும், மதச்சார்பின்மையை வேரோடு அழிக்கவும் மத்தியில் ஆளும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மாட்டிறைச்சி வர்த்தகம் குறித்த மத்திய அரசின் அறிவிப்பை முதலில் எதிர்த்தது கேரள மாநிலம் தான். அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மதச்சார்பற்ற பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து பல்வேறு புரட்சிகர போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


தற்போது, கேரள மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் உள்ள இந்துக் கோவிலின் சார்பாக இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பின் ஒருபகுதியான இப்தார் விருந்தினை நடத்திய சம்பவம் அனைவரின் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மலப்புரம் பகுதியில் உள்ளது வெட்டிச்சிரா கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி விஷ்ணு கோவிலில் கடந்த சில நாட்களாக சீரமைப்புப் பணிகள் நடந்து வந்தன. அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் அந்தக் கோவிலில் கடந்த மே 29 முதல் வரும் ஞாயிறு வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பூஜைகள் நடக்கும் அதே சமயத்தில் இஸ்லாமியர்களுக்கான இப்தார் விருந்து கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இந்த விருந்தில் 400-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த மக்களும் இந்த இப்தார் விருந்தில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இப்தார் விருந்து நடைபெற்ற இந்துக் கோவிலின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஏறக்குறைய 300 இஸ்லாமிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிதி வழங்கியுள்ளனர் என்பதுதான்.


இதுகுறித்து அந்தக் கோவிலின் கமிட்டி செயலாளர் மோகனன் ஆங்கில இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நாம் மதநல்லிணக்கத்தைப் போற்றும் சமூகத்தில் வளர்ந்தவர்கள். இங்கு மனிதநேயம் தான் முக்கியமே தவிர, மதம் அல்ல. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் மற்றும் சாதியினைப் பின்பற்ற உரிமை உள்ளது. ஆனால், அதற்காக மற்ற மதத்தினரோடு நட்புறவாடக் கூடாது என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. மற்ற மதத்தினரை வரவேற்பதற்காக நம் இதயத்தை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும். இந்த விருந்திற்கான ஏற்பாடுகளை யாரொருவரும் எதிர்க்கவில்லை. அனைவரும் மகிழ்ச்சியியுடன் வரவேற்றனர்” என்றார்.


மதங்களுக்கிடையேன கலவரங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்த இப்தார் விருந்து வழங்கும் விழா, மதநல்லிணக்கம் மேலோங்கியிருக்க வேண்டிய சூழலை உணர்த்துகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-