அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் நகரில் இரவு நேரங்களில் நகரப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத் தலைநகரான பெரம்பலூரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் இருந்ததால், அனைத்து வகை பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டன. இந்நிலையில், நகரில் நிலவிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து, 1996 முதல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பேருந்துகளும், பெரம்பலூரில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளும் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
இதனால், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு பழைய- புறநகர் பேருந்து நிலையங்களுக்கு செல்ல 2 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், ரூ. 3 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டதால் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி வந்தனர்.
இதனிடையே, ஷேர் ஆட்டோக்களின் வருகை அதிகரித்ததால் பேருந்து பயணத்தை புறக்கணித்த பயணிகளால், நகரப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டன. இதை பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவில் ஏறி, இறங்கினாலே ரூ. 5 கட்டணமாக வசூலித்து வருகின்றனர்.
பெரம்பலூர் நகரில் மட்டும் சுமார் 900-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருவது பயணிகளிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாள்தோறும், அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களால் கிராமப்புற மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதில்லை. சாதாரண ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், பெரம்பலூர் நகரில் இரவு நேர நகரப் பேருந்துகள் இயக்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரம்பலூர் நகரில், தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தாலும், வெளி மாநில, மாவட்ட மாணவ, மாணவிகள், தொழிலாளர்களின் வருகையாலும் இரவு நேரங்களில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அல்லது, இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோக்களில் கட்டணக் கொள்ளை
நகரில் இரவு 10 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதில்லை. இரவு நேர நகரப் பேருந்துகளும் இல்லாததால், பழைய, புறநகர் பேருந்து நிலையங்களுக்கு இரவு நேரங்களில் வரும் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பாலான பேருந்துகளில் பெரம்பலூருக்கு வரும் பயணிகள் அனைவரும், இரவு நேரங்களில் நான்கு சாலை அல்லது மூன்று சாலை சந்திப்புகளிலே இறக்கிவிடப்படுகின்றனர். குடும்பத்தினருடன் வருவோர் இரவு நேர பேருந்து சேவை இல்லாததால், சாலையோரங்களில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களை அணுகினால், 3 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்ல வேண்டுமானாலும் ரூ. 150 முதல் ரூ. 200 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்கருதி கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்கும் நிலையே ஏற்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-