அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி முதல் இடத்தைப் பிடித்தார்.

துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட அழகிய குரல் வளத்துடன் இனிமையாக தவறில்லாமல் ஓதும் போட்டியில் பங்கேற்ற 90 பேரில் “டாப் டென்” எனப்படும் பத்து பேரும் திருக்குர்ஆனை அழகாக ஓதியதை அமைப்புக் குழுவினர் நுட்பமாகக் கவனித்தனர்.

அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரும் புனித திருக்குர்ஆனை தங்களது இனிய குரலால் மிகச் சிறப்பாக புனித திருக்குர்ஆனை ஓதி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

பலத்த போட்டிகளுக்கு இடையில், அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி புனித திருக்குர்ஆன் இசைப்புப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார். இனிய இசைபோன்ற குரலுடன் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் திருக்குர்ஆனை ஓதிய அவர் முதலிடத்தை பிடித்தார்.அல்ஜீரியாவைச் சேர்ந்த யூசுப் ஹமாம் இரண்டாம் இடத்தையும், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சலா-எடின் ஹரரௌயி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழர் முஹம்மது அர்கம், வங்காள தேசத்தைச் சேர்ந்த முஹம்மது தாரிகுல் இஸ்லாம், இந்தோனேசியாவைச் சேர்ந்த ரஹ்மத் அப்துர் ரஹீம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஹ்மது அப்துல் அஜீஸ், டென்மார்க்கைச் சேர்ந்த அப்துல்லாஹி ஹுசைன், துருக்கியைச் சேர்ந்த இரன் பில்கிர், சாட் நாட்டைச் சேர்ந்த தாவூத் ஹஜர் இவர்களே பரிசு பெறாத மற்ற ஏழு பேர். இவர்களும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர்.உலகளாவிய இந்தப் போட்டியின் நிறைவு நாளில் அமைப்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள், மூத்த அலுவலர்கள், மரியாதைக்குரிய பெரியவர்கள் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

அமைப்புக் குழுவின் தலைவர் - கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகர் மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா விழாவின் புரவலர்களையும் நிகழ்வுகளை உடனுக்குடன் சிறந்த வகையில் செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர்களையும் சிறப்பித்தார்.போட்டிகளில் நடுவர்களாக இருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஷேக் இப்ராஹிம் பின் சைத் பின் ஹமத் அல் தோஸரி, அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாஹ் முஹம்மது சயீத் பெம்ரான், யமன் நாட்டைச் சேர்ந்த ஷேக் முஹம்மது அஹ்மத் சுலைமான் அல் ஜிலானி, பஹ்ரைனைச் சேர்ந்த ஷேக் ஜாஃபர் யூசுப் முகமது மஹ்மூத், எகிப்த் நாட்டைச் சேர்ந்த ஷேக் தாஹெர் முகமது சயீத் அல் அஸ்ஸியுத்தி, சிரியாவைச் சேர்ந்த ஷேக் முஹம்மது ஃபாஹ்த் அப்துல் வஹாப் கரூஃப், அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஒசாமா அல் சஃபி, ஷேக் அப்துல் அஸீஸ் ஹுசைன் அல் ஹோஸ்னி மற்றும் இராக்கைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஸாக் அப்தன் அல் துளைமி ஆகியோரும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்தவர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், புரவலர்கள், ஊடகவியலாளர்களுக்கு அமைப்புக் குழு மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.

- ஜெஸிலா பானு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-