அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் இயங்கி வரும் பொது இ-சேவை மையத்தில் சர்வர் அடிக்கடி செயல்படாததால் சான்றிதழ்களை பெற, விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.
வருமானம், சாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற விரும்புவோர், வருவாய்த் துறையின் வெவ்வேறு அலுவலகங்களுக்கு நாள் கணக்கில் அலைய வேண்டும். இதற்கு தீர்வு காணும் வகையில், பொது இ-சேவை மையங்கள் மாவட்ட ஆட்சியரகம், வட்டாட்சியர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்டது.
சான்று பெற விரும்புவோர், மூல ஆவணங்களுடன் சேவை மையம் சென்றால், அங்குள்ள பணியாளர்கள் சான்றிதழ்களை ஸ்கேனிங் செய்து, விண்ணப்பத்தை கணினியில் பதிவேற்றம் செய்து, அதற்கான ரசீது வழங்குவர். சான்றிதழில் எந்தெந்த அலுவலர்களின் கையொப்பம் பெற வேண்டுமோ, அவர்களுக்கு கணினி மூலம் அனுப்பி பரிந்துரை பெறப்படும்.
அதன்பின், மண்டல வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் கையெழுத்திட்ட சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பின்னர், விண்ணப்பதாரரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு சான்றிதழ் ஒப்படைக்கப்படும். இதனால் சான்றிதழுக்காக மக்களின் அலைவது தடுக்கப்பட்டது. மேலும், இந்த மையத்தில், பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் பெற முடியும்.
இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பெரிதும் பனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் சர்வர் செயல்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். ஆட்சியரகத்தின் தரைதளத்தில் இயங்கி வரும் இந்த இ-சேவை மையத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இந்த மையத்தில் உள்ள இணையதள சர்வர் அடிக்கடி பழுதாவதால், சான்றிதழ் கோரி வரும் மக்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதால் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ்கள் பெற முடியாமல், தனியார் கணினி மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பெறுகின்றனர். எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருதி இணையதள சர்வரை உடனடியாகச் சரிசெய்ய ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-