அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுக் குழாய்களின் முன்பு, ஒரு குடம் தண்ணீருக்காக பொதுமக்கள் இரவு முழுவதும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை களைவதற்காக கடந்த 2003- 04-ல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி, வழியோர கிராமங்கள் உள்பட 116 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
2 ஆம் கட்டமாக 2007-ல் செயல்படுத்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 306 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. ஆனால், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கான கூட்டு குடிநீர் திட்டம் குழாய் பதிக்கப்பட்டதோடு நிறுத்தப்பட்டதால், திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.
இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நாள்களில் 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, 21- 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகபட்சமாக 17 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது.
கடுமையான வறட்சியால் வீடுகளில் போடப்பட்டுள்ள 1,000 அடிக்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகளில் கூட தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் போதிய தண்ணீரின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போதைய குடிநீர் தேவையை சமாளித்துக்கொள்ள தண்ணீர் லாரிகளை நாடி வருகின்றனர். லாரிகள் மூலம் விற்கப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதால் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் ரூ. 250-க்கும், 7,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் ரூ. 1,000-க்கும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதில், பெரும்பாலான வாகனங்களில் விற்கப்படும் தண்ணீர் தரமற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விலை கொடுத்து தண்ணீர் வாங்கமுடியாத ஏழை, எளிய சாமானிய மக்கள் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் முலம் வழங்கப்படும் பொது குடிநீர் விநியோகத்தை நம்பி உள்ளனர்.
பொதுக் குழாய்களில் தண்ணீர் எப்போது வரும் என்று தெரியாத நிலையில், குடங்களை வரிசையாக வைத்து இரவு, பகலாக காத்திருக்கும் நிலையில் உள்ளனர். குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் தூக்கத்தை தொலைத்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் சைக்கிள்களில் குடங்களை கட்டிக்கொண்டு ஆண்கள் தண்ணீர் தேடி அலைகின்றனர். நகராட்சி உள்பட பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் இல்லாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை பொய்த்து போனதால் வறட்சி நிலவுவதை தடுக்க முடியாத நிலைதான். ஆனால், மாவட்ட நிர்வாகம் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முறையான நடவடிக்கை எடுத்துள்ளதா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏரி, குளங்களுக்கான வரத்து வாய்க்கால்கள் முள்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீரமைத்தால் மழைக்காலங்களில் நீர்நிலைகளின் முழுக்கொள்ளளவை எட்டலாம்.
மேலும், குளங்களை தூர்வாரி மழைநீரை சேமித்திருந்தால் குறைந்தபட்சம் நிலத்தடி நீர்மட்டத்தையாவது தக்க வைத்திருக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், ஊராட்சிகளில் 305 ஏரிகளும், சுமார் 500-க்கும் மேற்பட்ட குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாடின்றி உள்ளது. அதேபோல, ஆழ்துளை கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது.
இவற்றை கோடைகாலத்திற்கு முன்னதாக சீரமைத்திருந்தால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் குறைந்தபட்ச தண்ணீராவது கிடைத்திருக்கும். எனவே, இனிவரும் காலங்களிலாவது அரசு நிர்வாகங்கள் அலட்சியப் போக்கை கைவிட்டு நீர்நிலைகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-