அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாடாலூர்: பாடாலூரில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையைமூடக்கோரி கிராமமக்கள் மதுக்கடை முன் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பாடாலூர் -புள்ளம்பாடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் இருந்து ஊட்டத்தூர் செல்லும் சாலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 230 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியாக இருப்பதாலும், மதுக்கடையின் அருகிலேயே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதாலும் மதுக்கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. மேலும் அதனருகே சுமார் அரை கிமீ தூரத்தில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு பாடாலூர் மதுக்கடை மாற்றம் செய்யப்பட்டு விடும் என கிராம மக்கள் எண்ணியிருந்த நிலையில், பெரம்பலூரில் செயல்பட்டு வந்த ஒரு கடையை புதிய கட்டிடத்திற்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதி இடமாற்றம் செய்து திறந்தனர். எனவே ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு மதுக்கடையை மூட வேண்டும் என்றும், பாடாலூரில் டாஸ்மாக் மதுபானக் கடையே இருக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 2 நாட்களில் கடையை இடமாற்றம் செய்து விடுவதாக உறுதியளித்துவிட்டு சென்றனர்.

ஆனால் கடை மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் நேற்று ஊட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பகல் 12 மணியளவில் டாஸ்மாக் கடை திறந்ததும் கடைக்கு முன்பு திரண்டு வந்து உடனடியாக டாஸ்மாக் கடையை மூடும்படி கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விற்பனையாளர் கடையை மூடி விட்டு சென்று விட்டார். இருப்பினும், பொதுமக்கள் இனி கடையை நிரந்தரமாக திறக்கக்கூடாது என வலியுறுத்தி பாடாலூர் -புள்ளம்பாடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலால் ஏடிஎஸ்.பி தங்கவேல் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி கடை திறக்கமாட்டோம் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
இதனால் பாடாலூர் -புள்ளம்பாடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-