அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... பெரம்பலூர், ஏப்ரல் 20, 04:15 AM

பெரம்பலூர் நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை துல்லியமாக பார்க்கும் வகையில் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறையை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்தை சீர்செய்யும் பொருட்டும், விபத்துகளை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையிலும் பெரம்பலூர் நகரில் சுழல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பெரம்பலூர் நகரில் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், நான்குரோடு-மூன்று ரோடு ஜங்ஷன் பகுதி, ஆத்தூர் ரோடு, பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரி, உழவர் சந்தை, தேரடி பஜார் தெரு, ரோவர் வளைவு, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை துல்லியமாக பார்வையிட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சி மத்திய மண்டலத்திலேயே முதல்முறையாக நவீன கட்டுப்பாட்டு அறை பெரம்பலூரில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் ஐ.ஜி. திறந்து வைத்தார்

இந்த நிலையில் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையை பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ ‘ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்குள் சென்று, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பிரதிபலிக்கும் 9 டிஜிட்டல் எல்.இ.டி. திரைகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் விதத்தை பார்வையிட்டார். மேலும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திராவிடம் ஐ.ஜி. வரதராஜூ கேட்டு தெரிந்து கொண்டார்.

விபத்து மற்றும் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை எளிதில் தொடர்பு கொள்வதற்கான வழிகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக், மோகன்தம்பிராஜன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஜி. வரதராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

28 கண்காணிப்பு கேமராக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டரின் நிதியில் இருந்து ரூ.36 லட்சம் பெறப்பட்டு வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 13 சுழல் கேமராக்கள், ஒரே திசையை மட்டும் கண்காணிக்கக்கூடிய 15 கேமராக்கள் என மொத்தம் 28 கண்காணிப்பு கேமராக்கள் பெரம்பலூர் நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் பார்வையிடப்பட்டு வருகின்றன.

மேலும் பாடாலூர் அருகே ஊட்டத்தூர் பிரிவு ரோடு, திருமாந்துறை டோல்கேட், சிறுவாச்சூர் ஜங்ஷன் உள்பட தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் வருங்காலத்தில் 33 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகன போக்குவரத்து கண்காணிக்கப்பட உள்ளது. விபத்துகளை தடுப்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-