அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


பெரம்பலூர் நகரில் போக்குவரத்து மற்றும் தொடர் விபத்துகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட புறவழி சாலைகள் பயனற்று கிடக்கின்றன. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் நகரின் வளர்ச்சிக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாமக்கல், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரியலூர், தஞ்சாவூர் வழித்தடங்களில் இயக்கப்படும் வாகனங்கள் கடைவீதி வழியாகவும், ஆத்தூர், சேலம் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் காமராஜர் வளைவு வழியாகவும் சென்று வருகின்றன.
இதனால், மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படுகிறது. மேலும், நகரின் பிரதான சாலையாக விளங்கும் சங்குப்பேட்டை, பாலக்கரை, பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இப்பகுதிகளில் இயக்கப்படும் தனியார், அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இதையடுத்து, போக்குவரத்து மற்றும் சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் பெரம்பலூர் நகரைச் சுற்றி புறவழிச் சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் வரை ரூ. 11.5 கோடி மதிப்பிலும், இந்த புறவழிச் சாலையை பெரம்பலூர்- ஆத்தூர் சாலை கோனேரிபாளையத்தில் இருந்து பெரம்பலூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி வரை இணைக்கும் வகையில் ரூ. 1 கோடி மதிப்பிலும், ரூ. 7 கோடி மதிப்பில் செஞ்சேரி- செட்டிக்குளம், ஆலத்தூர் சாலை இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ரூ. 1.90 கோடி மதிப்பில் ரோவர் வளைவிலிருந்து எளம்பலூரை இணைக்கும் புறவழிச் சாலையும், இந்திரா நகர் பகுதியில் இருந்து சிட்கோ தொழிற்பேட்டை பிரிவு சாலை வழியாக ரூ. 1.19 கோடி மதிப்பிலும் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன.
இதையடுத்து, நகருக்குள் செல்லும் கனரக வாகனங்களை தடுத்து புறவழிச் சாலைகளை பயன்படுத்த பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தி வந்தனர். இதனால், கனரக வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினரின் அலட்சியத்தால் ஒருசில மாதங்களே பயன்பாட்டில் இருந்த மேற்கண்ட சாலைகள், தற்போது பயனற்று கிடக்கின்றன. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளால் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.
எனவே, அரியலூர் வழித்தடத்தில் இருந்து துறையூர், ஆத்தூர் வழித்தடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களையும், பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களையும் வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக உள்ள புறவழிச்சாலையை பயன்படுத்தவும், காமராஜர் வளைவு, ரோவர் வளைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைகளை பயன்படுத்தவும் காவல் துறையினர் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-