அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துறைமங்கலம் பகுதியில் 3 இடங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் 20, 04:30 AM

பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்காக பல்வேறு தெருக்களுக்கு மக்கள் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. மேலும் கிணற்று நீரும் வினியோகம் செய்யப்படாததால் துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரின்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் துறைமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏமாற்றம்

இதேபோல் துறைமங்கலம் கே.கே.நகர் பகுதியில் நேற்று காலை நகராட்சி சார்பில் லாரியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது சிறிது நேரத்திலேயே அந்த குடிநீர் லாரி அங்கிருந்து கிளம்பியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கூறி அப்பகுதியில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் மீண்டும் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதேபோல், பெரம்பலூர் துறைமங்கலம் ரோஸ்நகர் பகுதியில் நகராட்சி லாரி மூலம் குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் அங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-