அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, `ஐக்கிய அரபு அமீரகம்’ என்று அழைக்கப்படும் யு.ஏ.ஈ சற்று வித்தியாசமானது. வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் 25 சதவிகிதம் எண்ணெய் வளம் உள்ளது. அடுத்து ஓமன் நாட்டில் 10 சதவிகிதம் இருக்கிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமீரகத்தில் எண்ணெய் வளம் குறைவுதான். யு.ஏ.ஈ என்பது ஷார்ஜா, அபுதாபி, துபாய் போன்ற 7 நகரங்கள் இணைந்த ஒரு சிறிய நாடு. எண்ணெய் வளம் பெரிய அளவில் இல்லையென்றாலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு துபாய் என்ற நகரம் ஒன்றே போதும்.வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணையை வெளிநாடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் முக்கியத் துறைமுகம் துபாயில் இருக்கிறது. வளைகுடாவில் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் துபாயைத்தான் தேர்தெடுக்கும். அதனால், வெளிநாட்டு நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்கள் ஏராளமானவை இந்த நகரில் அமைந்துள்ளன. வளைகுடா நகரங்களில் துபாய் தவிர வேறு எங்கும் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்கிவிட முடியாது.உள்ளுர் மக்களின் உதவியுடன் தொழில் தொடங்க முடியும். வளைகுடா நாட்டுப் பணம், நம் நாட்டுப் பணத்துக்கு மாற்றப்படும்போது லட்சங்களாக மாறிவிடுகிறது. உழைத்து முன்னேற விரும்பும் பல இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அமீரகத்தின் மொத்த மக்கள்தொகை 29 லட்சம். அதில் இந்தியர்களின் மக்கள்தொகை மட்டும் 9 லட்சம். மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இந்தியர்கள். குருத்வாராக்கள், கிறிஸ்தவ கோயில்கள், இந்தியப் பள்ளிகள் இந்த நாட்டில் உள்ளன.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை சுகாதாரமற்ற தங்கும் வசதி. எந்த சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றாத, மனித உரிமை மீறல்களைக்கொண்ட ஒரு பணியிடமும் சுகாதாரமற்ற தங்கும் இடங்களும்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்விடம். நெருக்கடியான ஓர் அறைக்குள் குறைந்தது 4 பேர்கள் தங்குவார்கள். சுகாதாரமற்ற கழிவறைகள். அடுக்குப் படுக்கைகளில் தொழிலாளர்கள் உறங்குவதைப் பார்க்க முடியும். இந்த நாடுகளில் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேலாக உழைக்கவேண்டியதும் இருக்கும். சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, அவர்களை விரைவில் நோயாளிகளாக மாற்றிவிடும். ஆனாலும், குடும்பச்சூழலைக் கருத்தில்கொண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள்.

`வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான வாழ்விடங்களை நிறுவனங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என அமீரக அரசு பலமுறை உத்தரவிட்டும் பெரும்பாலான நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதில்லை. இதையடுத்து, சட்ட திட்டங்களை கடுமையாக்க அமீரக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்துக்குள், அமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான வாழ்விட வசதிகளை அளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. `இல்லையென்றால் 2 லட்சம் திர்ஹாம் அபராதமாக விதிக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அபுதாபியில், `முஷாபா’ என்ற தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் உள்ளது. இந்த நகரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அபுதாபி முனிசிபாலிட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதியில் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த அறிக்கையை ஏப்ரல் 6-ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் E.H.S எனப்படும் சுற்றுச்சூழல், சுகதாரம், பாதுகாப்பு சர்வதேச விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக அபுதாபி முனிசிபாலிட்டி, அபுதாபி போலீஸ், அரசு ஆகியவை இணைந்து இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக பணியாளர்களின் வாழ்விடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் அபுதாபி தீவுப் பகுதி, பனியாஸ்,வாத்பா, ஷாம்பா போன்ற பகுதிகளில் பணியாட்களின் வாழ்விடங்களின் நிலை பரிதாபகராமானதாக இருக்கிறதாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-