அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில், மாணவிகளுக்கான அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
பள்ளி மாணவர்களின் நலனுக்காக விலையில்லா பாடநூல், நோட்டு, புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, புத்தகப் பை, உபகரணப் பெட்டி என 14 வகையான நலத் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புற மாணவ, மாணவிகள் தொலைதூரம் நடந்து சென்று கல்வி கற்கும் நிலையை மாற்ற அவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
வேப்பந்தட்டையில் இருபாலருக்கான புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூரில் மகளிருக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களையும், அரசுப் பள்ளிகளையும் தற்போதைய முதல்வர் அளித்துள்ளார். பெரம்பலூரில், மாணவிகளுக்கான உயர்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இதுபோன்ற அரசுத் திட்டங்களை மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வன். தொடர்ந்து, சிதம்பரம் எம்.பி. மா. சந்திரகாசி, எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் 1,717 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 69.79 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கு. மோகன், முதன்மைக்கல்வி அலுவலர் க. முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அம்பிகாபதி, தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-