அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் நகரில் வெயில் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் மற்றும் தர்ப்பூசணி, முலாம்பழம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், இவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடலின் சூட்டைத் தணிப்பதற்காக கரும்புச்சாறு, தர்ப்பூசணி, இளநீர், சர்பத், பழக்கூழ் உள்ளிட்ட குளிர்பானங்களை பருகுவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, தர்ப்பூசணி, இளநீர், முலாம்பழம் ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. பழக்கூழ், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
பொதுவாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டில், மார்ச் முதலே கடுமையான வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. கோடையை சமாளிக்கும் வகையில், பெரம்பலூர் நகரின் சாலையோரங்களில் இளநீர், தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோடைகாலம் என்றாலே, மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது தர்ப்பூசணிப் பழங்களே. இப்பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி உடலை சீரான வெப்பநிலையில் வைக்கிறது. இதைத்தவிர, இதில் வைட்டமின் சி சத்தும், சர்க்கரையும் நிறைந்திருப்பதால் உடல் சோர்வைப் போக்க இது பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் மருத்துவப் பலன்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தர்ப்பூசணி பழம் கிலோ ரூ. 17 வரையிலும், ஒரு கீற்று ரூ. 10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில், தற்போது பெரம்பலூர் நகரில் தர்ப்பூசணியின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நகர்ப் பகுதிகளில் மட்டுமன்றி, சுற்றுப்பகுதிகளிலும் கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்கும் இளநீர், தர்ப்பூசணி, முலாம் பழம் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் திண்டிவனம், விழுப்புரம், சென்னையைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தர்ப்பூசணி கொண்டுவரப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கடந்தாண்டைவிட, நிகழாண்டு விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள நாட்டு இளநீர் ரூ. 25 முதல் 30-க்கும், பொள்ளாச்சி இளநீர் ரூ. 35 முதல் 40 வரையிலும் விற்கப்படுகின்றன. பொள்ளாச்சி இளநீரை விட, கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்படும் இளநீர் ருசியாக உள்ளதால், இதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
தர்ப்பூசணியை போலவே முலாம் பழங்களையும் மக்கள் அதிகமாக விரும்பி உண்ணுகிறார்கள். பொதுவாக இப்பழங்கள் ஆந்திரத்திலிருந்து மட்டுமே வருகின்றன. கடந்த காலத்தில், அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முலாம் பழங்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன. இந்த பழங்களின் வரத்துக் குறைவாக உள்ளதால், இவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. சிறிய பழம் ஒன்று ரூ. 40 முதல் பெரிய பழம் ரூ. 70 வரை விற்கப்படுகிறது.
இருப்பினும், கோடையை சமாளிக்க தர்ப்பூசணி, முலாம் பழம், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை அதிகளவில் பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதேபோல, சர்பத், பழக்கூழ், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பானங்கள் பருகுவதிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.


நுங்கு பெரம்பலூர் சங்குபெட்டையில் விற்பனை
உடம்புக்கு குளிர்ச்சி தரும் பன_நொங்கு  சீசன் ஆரம்பித்துவிட்டது. ஆறு சுளைகள் 20₹. நம் உடல் ஆரோக்கியமும் இவர்கள் வாழ்வாதரமும் அதிகரிக்கட்டும்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-