அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மந்திரவாதியிடம் கைப்பற்றப்பட்ட பிணம் யார் என்று அடையாளம் தெரிந்தது. சென்னையில் தற்கொலை செய்த மாணவியின் உடலை மந்திரவாதி தோண்டி எடுத்து வந்த திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
 பெரம்பலூர்,

பெரம்பலூர் புது பஸ் நிலையம் எம்.எம்.நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பெண்ணின் உடலை வைத்து நரபலி பூஜை நடத்தப்படுவதாக பெரம்பலூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விசாரித்த போது, மாந்திரீக பயிற்சி உள்ளிட்டவற்றை கற்று கொடுத்து வந்த கார்த்திகேயன் (வயது 31) என்ற மந்திரவாதி, தனது மனைவி நசீமா என்கிற தீபிகாவுடன் (21) வசித்தது தெரியவந்தது.

நரபலி பூஜை குறித்து விசாரித்த போது, கார்த்திகேயன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டின் அறையை சோதனையிட்ட போது, அங்கு மரப்பெட்டி ஒன்றில் துணிகளால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் பெண் பிணம் ஒன்று இருந்தது. மேலும் வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்ட போது, சுடுகாட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட மனித மண்டை ஓடுகள், மண்டை ஓடுகளின் எலும்பு துண்டுகள், மாந்திரீக புத்தகங்கள், காளி சிலை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

ஆவிகளுடன் பேசி சக்திகளை வளர்க்க...

அதன்பின்னர் கார்த்திகேயன், நசீமா ஆகியோரை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் அந்த பெண் பிணம் கார்த்திகேயனுக்கு எப்படி கிடைத்தது? அந்த பெண் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்பது குறித்து முதல் கட்டமாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சென்னை மயிலாப்பூர் சுடுகாட்டிலிருந்து ரூ.5 ஆயிரம் விலை கொடுத்து அந்த பெண்ணின் உடலை வாங்கியதாகவும், அதை வைத்து மந்திரங்களை ஓதி ஆவிகளுடன் பேசும் சக்திகளை பெற அகோரி பூஜை நடத்த இருந்ததாகவும் கார்த்திகேயன் போலீசாரிடம் தெரிவித்தார்.

கல்லூரி மாணவியின் உடல்

இந்தநிலையில் அந்த பெண் பிணம் குறித்து விசாரிப்பதற்காக பெரம்பலூர் போலீசார் சென்னை மயிலாப்பூர் சென்றனர். அங்கு கார்த்திகேயன் வாங்கிச்சென்ற பிணம் குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.அந்த பெண் உடலை விற்பனை செய்தது குறித்து மயிலாப்பூர் சுடுகாட்டு ஊழியர்கள் போலீசாரிடம் கூறுகையில், சென்னை தேனாம் பேட்டையை சேர்ந்த ஜெய ராமனின் மூத்த மகள் அபிராமி (20) ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அபிராமி கடந்த 18-1-2017 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் மயிலாப்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்தநிலையில் தான் எங்களை சந்தித்த கார்த்திகேயன், இளம்பெண்ணின் உடலை வைத்து பூஜை நடத்தப்போவதாக கூறி ரூ.5 ஆயிரம் கொடுத்தார். அதன்பின்னர் அபிராமியின் உடலை தோண்டி எடுத்து கார்த்திகேயனிடம் கொடுத்து விட்டோம் என்று கூறினர். அதனைத்தொடர்ந்து போலீசார் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரை பிடித்து பெரம்பலூர் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

அகோரி பூஜை நடத்த...

சுடுகாட்டில் பல்வேறு பிணங்கள் இருக்கையில், இளம்வயதில் தூக்குப்போட்டு அகால மரணமடைந்த அபிராமியின் உடலை வாங்கி சென்றது எதற்காக என்பது குறித்து கார்த்திகேயனிடம் விசாரித்த போது, போலீசாரிடம் அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

நான் சிறுவயதிலிருந்தே மாந்திரீகம் தொடர்பான வேலைகளை சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று கற்றிருக்கிறேன். மண்டை ஓடுகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து ஏவல், பில்லி சூனியம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளானவர்களை மீட்டெடுத்தல் உள்ளிட்டவற்றை தான் செய்து வந்தேன். இந்தநிலையில் அகோரி பூஜை நடத்தி ஆவிகளுடன் பேசுவதற்காக இளம்பெண்ணின் உடல் தேவைப்பட்டது. மேலும் இளம்வயதில் மனதளவில் பாதிக்கப்பட்டு தானாகவே உயிரை மாய்த்துக்கொண்ட உடலை தேடி அலைந்தேன். அதன் பின்னர் மயிலாப்பூர் சுடுகாட்டில் ரூ.5 ஆயிரம் கொடுத்து தூக்குப்போட்டு இறந்த அபிராமியின் உடலை தோண்டி எடுத்து கொண்டு வந்தேன். மண்டை ஓடுகளை சுடுகாட்டிலிருந்து எடுத்து வைத்திருக்கிறேன். வசிய மூலிகை மை தயாரிக்க மண்டை ஓடுகளை உடைத்து வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

அபிராமியின் பெற்றோருக்கு தகவல்

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அபிராமியின் உடலுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பிரேத பரிசோதனை நடக்கிறது. இதற்காக சென்னையிலுள்ள அபிராமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரவழைத்துள்ளனர். மாந்திரீகம் என்ற பெயரில் மிரட்டும் வகையில் பிணம், மண்டை ஓடு உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து மக்களை ஏமாற்றி பணம் பறித்தல், அபிராமியின் பிணத்தை வாங்க சுடுகாட்டிற்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் கார்த்திகேயன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நசீமா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.

மந்திரவாதி-மனைவி சிறையில் அடைப்பு

இந்தநிலையில் நேற்று இரவு மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா ஆகிய 2 பேரையும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுஜாதாவின் வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆஜர் படுத்தினர். அதன் பின்னர் 2 பேரையும் போலீஸ் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் சட்ட விரோதமாக பெண் பிணத்தை தோண்டி எடுத்து விற்ற சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுடுகாட்டு ஊழியர்கள் மணிமாறன், தன்ராஜ், மந்திரவாதியின் நண்பர் வினோத்குமார் மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாட்டு ஊழியர்கள் பல்வேறு சட்ட விரோத குற்ற செயல்களுக்காக மேலும் பிணங்களை விற்பனை செய்துள்ளனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-