அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் புறநகர் (புதிய) பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தப் பேருந்து நிலையத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் புறநகர் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி கிடையாது.
இங்கு, பயணிகளின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் பெயரளவில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளும் சில நாள்களிலேயே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், குடிநீர் தொட்டி அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிகழாண்டு தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர்.
இதையறிந்த, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒருசில வியாபாரிகள் முகவரி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, அளவு, விலை உள்ளிட்ட எந்த விவரமும் இல்லாமல் தரமற்ற தண்ணீர் பாக்கெட் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்கின்றனர்.
இவற்றை வாங்கி பருகி பயணிகள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர். இதனால், இங்கு வரும் பயணிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். புறநகர் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது, வருவாய் ஈட்டும் நோக்கத்தில் கூடுதலாக வணிக வளாகம் கட்டியுள்ள நகராட்சி நிர்வாகம், பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, தற்போது நிலவும் வறட்சியையொட்டி பயணிகளுக்குத் தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-