அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் இறந்துகிடந்தது தொடர்பான வழக்கில், அந்தப் பெண்ணின் காதலன் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரும்பலூரில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து இளம்பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அவர் குரும்பலூர் புதுக்காலனியைச் சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (22) என்பதும், கடந்த 12 ஆம் தேதி காணாமல் போனதும் தெரியவந்தது. பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவை அவரது காதலன் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தீபன், அவரது நண்பர் சின்னசாமி, பார்த்தீபனின் பெற்றோர் ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஐஸ்வர்யாவின் தந்தை தங்கவேல் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ராவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, ஐஸ்வர்யாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர்- துறையூர் சாலையில், அரசு தலைமை மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். பலனில்லாததால், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்றாலும், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
110 பேர் கைது: இதனிடையே, ஐஸ்வர்யா இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அவரது உயிரிழப்புக்கு காரணமான பார்த்தீபன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெரம்பலூர் காமராஜர் வளைவு எதிரே வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 110 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-