அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


          மகளிர் தினம்! அதிகம் அறிமுகம் செய்து வைக்க தேவையில்லை இந்த நாளை. சமூகவலைதளவாசிகளாகிய நம் பார்வைக்கு கடந்த இரண்டு நாட்களாக, இன்று உச்சமாக, இன்னும் இரு நாட்களுக்கு மழைவிட்ட தூவானமாக மகளிர்தினத்தை சிலாகித்து   நம் கண்ணில் பல   பதிவுகளைக் கடக்க கூடும்.  பல பட்டிமன்றங்களில் இன்றைய விவாதத் தலைப்பு 'பெண்களின் சுதந்திரம்' எனும் மையக் கருத்தைக் கொண்டிருக்கக் கூடும்.  எந்த சேனலை திருப்பினாலும்  பெண்களின்  மேன்மைகள் போற்றப்பட்டிருக்கும். போகட்டும்!
     பெண்களை அடிமைகளாகவே வைத்திருந்த காலகட்டத்தில், வேதங்களைத் தொடவும் அனுமதி மறுத்திருந்த அடிமைவாத கோட்பாடுகளின் உச்சகட்ட  சூழலில் பெண்களைப் பற்றி தனி அத்தியாயமே அருளி பெண்களைச் சிறப்பித்த  எல்லாம் வல்ல ஏகனின் மார்க்கத்திலிருந்து வார்த்தெடுக்கப்பட்ட எம் இஸ்லாமியப் பெண்களிடம் "மார்ச் 8 - சர்வதேச மகளிர்"  தினத்தினையொட்டி பெண்கள் சார்ந்த கருத்துக்களை கேட்டிருந்தோம்.  இதோ அவர்களின்  பதில்கள் ...
ஜலீலா கமால், துபாயில் வசிக்கும் தமிழகப் பெண்மணி. சமையல்கலை வல்லுநர்.   துபாயில் இருந்து சென்னைக்கு புர்கா வகைகளை இறக்குமதி செய்யும் வளர்ந்துவரும் பெண் தொழிலதிபர்.
கேள்வி : பெண்களாய் பிறப்பதற்கு பலர் சலித்துக் கொள்கிறார்களே?ஏன்?
பதில் :   பெண்ணாய் பிறந்ததற்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் உங்களை பிசியாக வைத்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் மன அழுத்தம் ஆகியவைகளில் இருந்து விடுதலை பெறலாம். பெண்கள் கண்டிப்பாக தத்தம் சின்ன சின்ன செலவுகளுக்கு உரிய செலவுகளை நாமே பார்த்துகொள்ளும் அளவிற்கு சிறுதொழில் செய்து தொகை ஈட்டவேண்டும். இப்படியான பெண்கள் நிச்சயம் கொண்டாடப்படவேண்டியவர்களே. அவர்களுக்கெல்லாம் சலிப்பு வராது, மாறாக இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதில் தான் சிந்தனை ஓடும்.

முனைவர் சுமையா, சிறந்த சமூக சேவைக்கான விருதினை முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கையால் வாங்கிய கீழக்கரை தாசீம்பீவி கல்லூரி முதல்வர். 
கேள்வி : சாதனைப் பெண்ணுக்கான அளவுகோல் என்ன ?   பெண்களின் சாதனையில் ஆண்களின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் என  நினைக்கிறீர்கள் ?
பதில்:   தன் வாழ்க்கைப் பயணத்தில்  வெற்றிகரமாக தன் குடும்பத்தை உருவாக்கும் போதும், இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறியவாறு அவள் தனித்து விளங்கும் போதும்  ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதனையாளர் தான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய வழியில் அனைத்துப் பெண்களும் சாதனையாளர்களாக முயற்சிப்போம்! இன்ஷா அல்லாஹ்.
உண்மையில் ஆண்கள் பெண்களை புரிந்துகொள்கிறார்கள், அவர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் எத்தனைபேர் அவர்களின் தினந்தோருமான நடவடிக்கைகளில் மகிழ்ச்சியளிப்பது தன் மனைவிதான் என்கிறார்கள்?  ஊக்கங்கள் அதிகரிக்கையில் சாதனைகளும் அதிகரிக்கும்.
ஜபினத், நாவலாசிரியர், இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றவர்,  சமூக ஆர்வலர்.
கேள்வி : பெண்களுக்கான கடமையின்  எல்லை என்ன ?
பதில் :  ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் பொது தேர்வுகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் சாதிக்கின்றனர் ஆனால் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு எத்தகைய இடத்தில் இருக்கிறது? ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, ஒரு பஸ் ட்ரைவர், ஒரு ஆட்டோ ஓட்டுனர் போதுமா..? இத்தகைய பெரிய பிரபஞ்சத்தில் பெண்ணாளுமையை காட்ட..
பள்ளியிலும், கல்லூரியிலும் படிப்பில் ஆண்களை மிஞ்சும் பெண்கள் பொருளாதாரத்தில் என்ன சாதித்து இருக்கிறார்கள்...?
படித்து உலக அறிவைப் பெற்ற பெண்கள் வாழும் நாளில் நம் சமுதாயத்திற்கும் ஏதாவது செய்து விட்டு போக வேண்டும்.  பிள்ளைகள் பெறுவதும் குடும்பத்திற்கு நற்பெயர் வாங்கித் தருவதோடும் ஒரு பெண்ணின் கடமை முடிவடைந்து விடாது.  நாம் சார்ந்து வாழும் நாட்டின் ஒவ்வொரு பிரச்சைனகளின் தீர்வுகளுக்கும் தம் பங்களிப்பை நிலை நிறுத்த வேண்டும்.  அதுவே அவள் கொண்ட பெண்மைக்கும் பெருமையாகும்.
சித்தி ஆலியா,  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்( NWF)  முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினராக  இருந்து, இப்போது களப்பணியாற்றும் சமூக ஆர்வலர்
கேள்வி : பெண்கள் தினம் - முழுமையான சுதந்திரம் கிடைத்ததற்கான கொண்டாட்டத்திற்கானதாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில் : பெண்கள் தினம் ஒன்று இருப்பதே பெண்களுகான உரிமைகள் மறுக்கபடுவதற்கான சான்றுதான்....
அந்த தினத்தில் பெண்கள் தங்களை பெருமைபடுத்திக் கொள்வதைவிட இன்னும் எங்களுக்கு இது வேண்டும் அது வேண்டுமென்று தான் கோரிக்கை வைக்கிறார்கள். ஆபாச உடையணிந்து ஒய்யாரமாக நடந்து செல்வது தங்கள் உரிமை என்கிறார்கள் ஒருபுறம், மறுபுறம் பெண்களை ஆபாசபடுத்தி இழிவுப்படுத்துவதாக போராட்டம் நடத்துகிறார்கள். எது பெண்களின் சுதந்திரம் என்பதை அறியாதவர்களாகவே பெண்கள் மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள் .
பானு ஹாரூன், பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி,   தேர்ந்த எழுத்தாளர்.
கேள்வி :   பல பிரச்சனைகளில் உங்கள் பக்குவமான பதிவுகளில் யாருமே சிந்தித்திடாத தீர்க்கமான தீர்வுகள் காணமுடிகிறதே ?

பதில் : உணர்வு பூர்வமான எண்ணங்களை விடுத்து அறிவு பூர்வமான சிந்தனை, செயல்பாடுகளுடன் எந்த விஷயங்களையும் அணுக
பெண்கள் முயற்சிக்க வேண்டும்.
ஆஷா பர்வீன், களப்பணியாளர், சமூக ஆர்வலர். ஆலிமா  என பல துறைகளில் தன்னை பிரதிபலிப்பவர்.
 கேள்வி : மகளிர் தினத்தை     எப்படி நோக்குகிறீர்கள் ?

பதில் : இறைவன் படைத்த எல்லா நாளும் ஆண்,பெண் இருவருக்கானது தான்! பெண் உரிமைகள்  ஒடுக்கப்பட்ட மற்ற இனத்தவர்களுக்கு  வேண்டுமானால் அதை கொண்டாட தோணலாம்! ஆனால் இஸ்லாம் முழுமையாகத் தெரிந்த பெண்ணுக்கு எல்லாமே அவள் தினம்தான்!   மகளிர் தினம் ஒரு பொருட்டல்ல!
ஜரீனா ஜமால், வெல்பேர் பார்ட்டியின் தமிழக மகளிர் அணி தலைவி. சமூக ஆர்வலர், எழுத்தாளர். 
கேள்வி : ஒரு பக்கம்  மகளிர் தினம் இன்னொரு பக்கம் மகளிர் உரிமை சார்ந்த போராட்டம், இஸ்லாமிய சிந்தனை ரீதியில் எப்படி இதனை பார்க்கிறீர்கள் ?

பதில் : உலகம் முழுவதும் பெண்ணுரிமை போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. பெண்களெல்லாம் தங்களுக்கான உரிமைகளை பெற்றுவிட்டதாக சொல்லிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதாக கணக்கிடப்படுகிறது. "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசாம்.
"கண்ணால் வெருட்டி-------யால் மயக்கி" என்று அன்றைய சித்தர்கள் பாடியபோது "கைறு மாதாஇத்துன்யா  அல் மர்ரத்துஸ் ஸாலிஹா "  என்றது இஸ்லாம். "உலக செல்வங்களிலே உயர்வானது பெண்கள்" என்று அவள் பெருமையை பறைசாற்றியது இஸ்லாம். இவ்வாறு இஸ்லாம் பேச்சுரிமை, படிப்புரிமை, எழுத்துரிமை,  சொத்துரிமை,  மணவுரிமை, தகுதியற்ற கணவனிடம் விடுதலைப் பெறும் உரிமை,  மறுமணம் செய்துகொள்ள உரிமை,  பதிப்புரிமை  தொழிலுரிமை போன்ற கணக்கில்லா உரிமைகளை வழங்கி அவளை ஆண்டு முழுவதும் பெண்கள் "நாள்" கொண்டாட வைத்துள்ளது
நிலக்கோட்டை Judicial மாஜிஸ்திரேட் நீதிபதி  ரிஷானா
கேள்வி : ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதில் அடிமைதனம் கோட்பாடு ஒளிந்துள்ளதாக கருதுகிறீர்களா?

பதில் : இல்லை. ஆண்களும் பெண்களும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவர்களே, மேலும் இவர்களை ஒப்பீட்டின் கீழ் கொண்டு வர முடியாது.  
உடற்கூறுகளின் அமைப்பின் படி ஆண் பெண்ணை விட வலிமையானவனே!  அதற்காக பெண்கள் அவர்களின் அடிமைகள் கிடையாது. ஆண் பெண்ணுக்கிடையே ஆத்மார்த்தமான மகிழ்வான தருணங்களை ஒருவரை ஒருவர் கொண்டாடும் போதும் குறைநிறைகளோடு  ஏற்றுக்ககொள்ளும் போதே  உணர முடிகிறது.  

பர்வீன்பானு அனஸ், ஆசிரியை மற்றும்  Burak group of companies-ன் இயக்குநர் .

கேள்வி : பெண்கள் தினம் பற்றி சிலாகிக்கப்படுகிறதே!?
பதில் :  பெண் என்பவள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவராலும் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக கொண்டாடப் பட்டுக்கொண்டு தான் இருக்கின்றாள்.
ஆனால் என்று ஒரு பெண் தன் சுயம் அறிந்து ,சமூகத்தில் தன் மீதான தேவை அறிந்து, பொய் சமூக கோட்பாடுகள், கண்ணுக்குத் தெரியாத போலி மன விலங்குகளை உடைத்து செயல்படும் நாள்தான் தினம் தினம் கொண்டாடப் பட வேண்டிய நாள்.
பர்சானா தஸ்லிம், சமூக ஆர்வலர், சென்னை வெள்ளத்தின் போது அமஞ்சிகரை பகுதியில் முழுகவனம் செலுத்தி உதவிகளைச் செய்தவர். 

கேள்வி : மகளிர்தினம் கொண்டாட தகுதியானவர் யார் ?

பதில் : வருடத்தில்  ஒரு நாளை கொண்டாடுவது  விஷயமல்ல,  அந்நாளை கொண்டாடுவதற்குரிய ஒரு கொள்கை, இலட்சியம் மற்றும் உணர்வு பூர்வமான  உந்துதலோடு கொண்டாடுவதில் தான் சிறப்பு  இருக்கிறது. நாம் சாதாரண மகளிராய் பிறந்து மனிதநேயத்தை மலர செய்ய, மனதார பாடுபட்டாலே மகளிர் தினம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி   கொள்ளலாம்.

மலிக்கா ஃபாரூக், கவிதை துறையில் தினம் தினம் ஏதேனும் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டே இருக்கும்  பெண்மணி. 
பதில்களையும் கவிதை வடிவிலேயே தருவதில் கைத்தேர்ந்தவர்.  மகளிர் தினத்தையொட்டி இஸ்லாமியப் பெண்மணியின் சிறப்பு பதிவிற்கு சிறப்பு  கவிதையொன்றுச் சொல்லுங்களேன் என வேண்டுகோள் விடுத்தோம்... அந்த கவியருவியின் சாரலில் சில துளிகள் :
உலக மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி மகிழும்  அதேநொடி,,,
ஓயாப்போராட்டத்தில்உலன்றபோதும் உயரத்துடிக்கும் மகளிருக்கு
ஒற்றை தினமாவது ஒதுக்கியவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
 உன்னத பெண்மைக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பாயென்றால் ?
சாதிக்கும் ஒவ்வொரு பெண்மணிக்கு பின்னால் மட்டுமல்ல
சாதரண பெண்மணிகளுக்கு பின்னாலும் முன்னாலும்
இழிந்தவைக்கொண்டு ஈட்டிப்பேச்சால்  பெண்ணைச் சாய்க்க
ஈனமுற்ற ஊனமனம் கொண்டோர்களால் கொடுக்கபட்டு
ஆரா ரணத் தழும்புகளாய் ஆணியடிக்காது மாட்டியிருக்கும்
பத்தினியற்றவளென்ற பட்டங்களும்
நடத்தைகெட்டவளென்ற பதக்கங்களும்...
மாட்டிவிடப்பட்டவைகள் மாறுசெய்யப்பட்டவையென  
அச்சம்தவிர்த்து மேலேறும் பெண்மைகள்
மேதாவிகளாய் நற்பண்புகள் கொண்ட சாதனையாளராய்.
இழிச்சொற்கிலியில் சிக்கி சுமைச் சோர்வுக்குள் மக்கி
அச்சப்பிடியில் மாட்டியவர்களெல்லாம்
இருளறைக்குள் தன்னை திணித்து மூலையில்
முடக்கப்பட்டோர்களாய்....
பெண்ணே
உண்மை, உன்னதம் ,நேர்மை
உனக்காய் நீ உடுத்திகொள்ளும் ஆடைகள்
இறைநம்பிக்கை தன்னம்பிக்கை
உலகவாழ்வில் உனக்காய் கைகொடுக்கும் உரிமை[கை]கள்..
மீண்டுமெனது,,,
உலக மகளீர் தின வாழ்த்துகள்
உயர்வாய் பேணவேண்டும் பெண்மானங்கள்...

பேட்டி கண்டவர்:
ஆமினா முஹம்மத் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-