அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின. மர்ம நபர்கள் அந்த கடைகளுக்கு தீ வைத்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

கடைகளில் தீப்பிடித்தது

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கோழிக்கடை, பிரியாணிகடை, காய்கறிகடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 6 கடைகள் இருந்தன. அந்த கடைகள் அனைத்தும் கீற்றுக்கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை அடைத்து விட்டு அவற்றின் உரிமையாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். மணி என்பவரது கடையில் வேலை செய்து வரும் ஆறு முகம் (வயது65) மட்டும் கோழிக்கடைக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அந்த கடைகளின் கீற்றுக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்து விட்டார். அப்போது அவருக்கு காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

கியாஸ் சிலிண்டர்கள்

பின்னர் அந்த கடைகளில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) சதாசிவம் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் கடைக்குள் 2 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. இதைக்கண்ட தீயணைப்பு படைவீரர்கள் அந்த சிலிண்டர்களில் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர். இருந்தாலும் 6 கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்து விட்டன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மொபட், ஒரு ஸ்கூட்டர், சமையல் பாத்திரங்கள், 2 தள்ளுவண்டிகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் விற் பனைக்காக வைக்கப்பட் டிருந்த கோழிகள், சாலை யோரம் வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களும் தீயில் கருகின. கடைகளின் அருகே மின்கம்பத்தில் இருந்த வயர் களும் தீயில் எரிந்தது. இந்த தீ விபத்தில் ரூ.2லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்ததாக கூறப் படுகிறது.

போலீசார் விசாரணை

கடைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததை பார்த்து அவற்றின் உரிமையாளர்கள் கதறி அழுதனர். முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் யாரேனும் இரவு நேரத்தில் கடைகளுக்கு தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கம்பம் சீரமைப்பு

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் எரிந்து போன மின்கம்பத்தை பார்வையிட்டனர். பின்னர் பாலக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரத்தை துண்டித்து விட்டு சேதமடைந்த வயர்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் புதிதாக வயர்கள் இணைக்கப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-