அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் அருகே பாடாலூரில் சாலையில் கவிழ்ந்த கார் மீது லாரி மோதியதில் தொழிலாளர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாடாலூர்,

ரெயில்வே காண்டிராக்ட் பணி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரெயில்வே காண்டிராக்டர் பாஸ்கரன். இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரெயில் நிலைய பகுதியில் ரெயில்வே எல்லை பகுதியை அளவிடும் வகையில் கற்களை நிறுவுதல், ரெயில்வே தண்டவாள பணிகளுக்கு ஜல்லிக்கற்களை கொட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு காண்டிராக்ட் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் ரெயில்வே காண்டிராக்ட் பணிகளுக்காக தனது நண்பர் வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா அரங்காபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் கோகுல்குமாரிடம் (வயது 27) தொழிலாளர்களை அனுப்பி வைக்குமாறு பாஸ்கரன் கேட்டுள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 கூலித்தொழிலாளர்களை கோகுல்குமார் தனது காரில் அழைத்து கொண்டு திருவண்ணாமலையில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை நோக்கி சென்றார். அந்த காரை கோகுல்குமார் ஓட்டினார்.

விபத்தில் சிக்கிய கார்

நேற்று அதிகாலை 2 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் அந்த கார் சென்று கொண்டிருந்தது. பாடாலூர் சந்தை பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மைய தடுப்புச்சுவரை ஒட்டியிருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.

அதன்பின்னர் எதிர்புறமுள்ள சாலையில் கவிழ்ந்தது. அப்போது கரூரில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக அந்த கார் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் வந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.

4 பேர் பலி

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் மற்றும் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் இறந்தவர்களின் விவரம் வருமாறு:-

1. கார் டிரைவர் கோகுல்குமார், 2.வேலூர் மாவட்டம் அரங்காபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(35), 3. சித்திரை ரெங்காவரம் கிராமத்தில் வசித்த பார்த்திபன் (36), 4. சூரைக்குளம் நரசிம்மன் (42).

மீட்பு பணியில் போலீசார்

மேலும் காருக்குள் சிக்கியிருந்த மற்ற தொழிலாளர்கள் படுகாயத்துடன் அய்யோ... அம்மா... என அலறினார்கள். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசுப்ரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தினால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான கார், லாரி ஆகியவற்றை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இறந்த டிரைவர் கோகுல்குமார் மற்றும் தொழிலாளர்கள் சங்கர், பார்த்திபன், நரசிம்மன் ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா, துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் விபத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். விபத்தில் படுகாயமடைந்த அரக்கோணம் பகுதியை சேர்ந்த சேட்டு, ரசூல்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன்,பாலாஜி, மாதவன், ராஜேஷ், டெல்லிபாபு, ஹரிபாபு, மணி, வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா பொன்னப்பன் தாங்கல் பெரியதெருவை சேர்ந்த நரசிம்மன் ஆகிய 9 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இதில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொன்னப்பன் தாங்கல் பெரியதெருவை சேர்ந்த நரசிம்மன் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. நரசிம்மனின் உடலும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உறவினர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை வந்து உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.

போலீசார் விசாரணை

மேலும் விபத்தில் தொடர்புடைய அந்த லாரியின் டிரைவர் கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ராஜனிடம் (39) போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசில் ஜனார்த்தனன் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-