அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அன்னமங்கலம், சிங்கராயபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 28 வீரர்கள் காயமடைந்தனர்.

வேப்பந்தட்டை,

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கி சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக்குழுவினரும், பொதுமக்களும் ஏற்பாடு செய்தனர். அதற்கான முறையான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேப்பந்தட்டை தாசில்தார் மனோன்மணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் முழு பரிசோதனையும், மாடுபிடி வீரர்களுக்கு அரசு டாக்டர்களை கொண்டு முறையான மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

9 வீரர்கள் காயம்

இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் அன்னமங்கலம், தொண்டமாந்துறை, விசுவகுடி, முகமதுபட்டிணம், திருச்சி மாவட்டம் இருங்கலூர், ஈச்சம்பட்டி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூடமலை, ஆத்தூர், கெங்கவல்லி, மங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

அப்போது மாடுகள் முட்டியதில் 9 வீரர்கள் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பரிசுகள்

போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கான பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு பணிகளில் அரும்பாவூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

சிங்கராயபுரத்தில்...

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சிங்கராயபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அன்னை திடல் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அதன் வழியாக அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர்.

அப்போது மாடுகள் முட்டியதில் 19 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் தெட்சிணாமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த இருகையூரை சேர்ந்த இளையபெருமாள் (வயது 60), குமணன் (38), ராஜா (32), சுப்பிரமணி (23) ஆகியோர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் அடக்கப்படாத மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகளை அடக்கிய வீரர்கள் ஆகியோருக்கு கட்டில், பீரோ, வேட்டி, தங்க நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

உடையார்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்போட்டிக்கு உரிய அனுமதி இல்லாததால், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அதிகாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-