அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் #Dubai

 கல்வியின் முக்கியத்துவம் அறிந்த துபாய்  தமிழனை தேடிவந்த கின்னஸ் சாதனை:

பென்சில், நோட்டு புத்தகங்கள், பள்ளி பாடப்புத்தகங்களை தேடி தேடி சேகரித்து வரும் துபாய் தமிழர் வெங்கடராமன், அதன்மூலம் கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார்.

2009-ம் ஆண்டு என்னிடம் இருந்த பென்சில்களை பத்திரப்படுத்தி வைத்தேன். அதை பார்த்ததும் விதவிதமான பென்சில்களை சேகரிக்கும் ஆர்வம் துளிர்விட்டது. வீடு, அலுவலகம், பிள்ளைகளின் நண்பர்கள் என ... படிப்படியாக தேடல் ஆரம்பிக்க ஏராளமான பென்சில்கள் குவிந்தன. இப்படி சேகரித்த பென்சில்களை ஏழை எளிய குழந்தைகளின் கல்வி முயற்சிக்கு பரிசளிக் கும் எண்ணம் துளிர்விட ... குழந்தைகள் காப்பகத்திற்கு கொடுத்து மகிழ்ந்தேன். இந்த அனுபவம் மேலும் பல தேடல்களை உருவாக்கியது. அடுத்ததாக நோட்டுப்புத்தகங்கள், பள்ளிப் பாடப்புத்தகங்கள், பென்சில்-பேனா ... என கல்வி சம்பந்தமான பொருட்களை தேடி தேடி சேகரிக்க ஆரம்பித்தேன். இப்படியே நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க கடந்த வருடம் மேற்கொண்ட மாபெரும் தேடல் கின்னஸ் சாதனையை உருவாக்கி கொடுத்தது.

24 மணிநேரத்தில் எவ்வளவு கல்வி பொருட்களை சேகரிக்க முடியும் என்பதை செய்து காட்டுவதே இந்த மாபெரும் தேடல். வழக்கமான தேடல்களுடன் ரப்பர், ஸ்கேல், வெள்ளை காகிதங்கள் என இதர பொருட்களையும் சேகரிப்பு பட்டியலில் சேர்த்து கொண்டு தேடலை துரிதப்படுத்தினேன். ஒருவரால் மட்டுமே அனைத்தையும் சேகரித்துவிட முடியாது என்பதால் சில சமூக அமைப்புகளை நாட ... அவர்களும் என்னுடைய சாதனை முயற்சிக்கு துணை நின்றனர். பொருட்களை சேகரிக்கவும், சேகரித்த பொருட்களை சேர்த்துவைக்கவும் இடம் தேவைப்பட்டதால் துபாயில் உள்ள இந்திய பள்ளிகளை அணுகினேன். அவர்களும் எனது நோக்கத்தை புரிந்து கொண்டு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் நிகழ்ச்சியை நடத்த இட உதவி அளித்தார்கள். இந்த மாபெரும் தேடலில் துபாய் மக்களும் கலந்து கொள்ள சுமார் 10 ஆயிரத்து 975 கிலோ எடையுள்ள கல்விப்பொருட்களை 24 மணிநேரத்தில் சேகரித்து காட்டினோம். இதில் பள்ளிக்கூட பை, ஜியாமெண்டரி பெட்டிகள், ரப்பர், கலர் பொருட்கள் போன்ற பொருட்களும் அடக்கம். 24 மணிநேரத்தில் இவ்வளவு பொருட்களை சேகரித்தது இதுவே முதல்முறை என்பதால் கின்னஸ் புத்தகத்தில் பதிந்து கொண்டு சாதனை சான்றிதழையும் வழங்கினார்கள். இந்த உற்சாகத்துடன் கிடைத்த பொருட்களை செம்பிறை சங்கத்திடம் (ரெட் கிரசண்ட்) ஒப்படைத்தோம்.

அந்த சங்கத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து எழுதுபொருட்களும் உலக நாடுகளில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகளிடம் அளிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்கள், ஏமன், ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு இவை அனைத்தும் தானமாக வழங்கப்பட்டது. இதை நான் விளம்பரத்துக்காக செய்யவில்லை. இன்னும் இந்த நவீன உலகத்தில் பென்சில், பேனா வாங்கக்கூட வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் செய்துள்ளேன் '' என்று தன்னடக்கமாக கூறுகிறார் இந்த கின்னஸ் சாதனை தமிழர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-