அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


எஸ்.எஸ்.கில் அவர்களின் இஸ்லாம் மற்றும் இந்திய முஸ்லீம்கள் என்கிற நூலைப்படித்து முடித்தேன். இஸ்லாம் மற்றும் இந்திய இஸ்லாமியர்களைப்பற்றிய ஒரு ஆழமான மற்றும் தெளிவான புரிதலை பெற விரும்பினால் இந்த நூலை நீங்கள் வாசிக்கலாம்.
இஸ்லாம் என்கிற மதம் வாளை ஒருபக்கமும்,குரானை இன்னொரு பக்கமும் ஏந்திக்கொண்டு பரவியது என்பது பரவலாக வைக்கப்படுகிற குற்றச்சாட்டு. கிறிஸ்துவத்துக்கும் இது பொருந்தும் என்பதே உண்மை. ஆனால்,வெறுமனே போர்களால் மட்டுமே இந்த மதங்கள் பரவிவிடவில்லை. மிகக்கடுமையான சூழல்களில் தங்களின் மதத்தை பரப்பவும்,பலப்படுத்தவும்,காப்பாற்றிக்கொள்ளவும் போரும் ஒரு கருவியாக இருந்தது என்பதே உண்மை.
இன்றைக்கும் உலகில் மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கும் மதமாக இஸ்லாமே இருக்கிறது. அதை ஒற்றைப்படையாக வெறுப்பாலும்,வன்முறையாலும் பரவுகிறது என்று சொல்லிக்கொண்டு இருப்பது அதைப்பற்றிய புரிதலை தராது. 
இஸ்லாமின் மிகப்பெரிய பலம் அதனிடம் இருக்கும் பன்முகத்தன்மை. இஸ்லாம் தோன்றிய ஆரம்பகாலத்தில் நிறம்,மொழி,இனம்,நாடு என்கிற வேறுபாடுகளை பார்க்காமல் அது தன் மதத்துக்குள் சகலரையும் இணைத்துக்கொண்டது. பல்வேறு படையெடுப்புகள் மூலம் உலக மதமாக ஆகிய இஸ்லாம் அதை திருமணங்கள்,பல்வேறு கலாசாரத்தின் அம்சங்களை உள்வாங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் சாதித்தது.
இஸ்லாமுக்காக போராடிய வீரர்களுக்கு போரில் கிடைக்கும் செல்வங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட்டது மற்றும் போரில் இறந்தால் சொர்க்கம் ஆகியன மதத்தை இன்னமும் வேகமாக பரப்பியது.
இஸ்லாம் பரவியது ஒரு மாபெரும் கலாசார புரட்சிக்கும்,ஐரோப்பியாவில் மறுமலர்ச்சி வருவதற்கு முன்பேயே ஒரு பொற்காலத்துக்கு வழிவகுத்தது. கிரேக்க-ரோம,ஈரானிய-செமிடிக் ,மலாய்-ஜாவா,சீன,இந்திய கலாசாரங்கள் கலப்பதை அது சாதித்தது. அற்புதமான அறிவியல் மற்றும் வானியல் நூல்கள் தொழில்நுட்பங்கள் எழுந்தன. இஸ்லாமின் திறந்த தன்மை அதை சாதித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் எழுந்தன.
இறைவனை தவிர மற்றவர்களின் வரிகளை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது நானொரு எளியவன் என்றே நபிகள் சொல்லிவந்திருக்கிறார். நபிகளின் வாரிசுகள் காலிபாவாக இருக்க வேண்டுமா அல்லது நியமிக்கப்படுபவர்கள் இருக்க வேண்டுமா என்கிற சிக்கலில் ஷியா மற்றும் சுன்னி இஸ்லாமிய பிரிவுகள் உண்டாகின. அவர்களுக்குள்ளேயே வாளேந்தி சண்டையிடுவது,கொன்று கொல்வது இன்றுவரை தொடர்கிறது.
பெண்களுக்கு போதுமான உரிமைகள் தருவதில்லை இஸ்லாம். அது அவர்களுக்கு பாதி சொத்துரிமை தான் தருகிறது ; ஒரு ஆண் நான்கு திருமணங்கள் செய்துகொள்ளலாம் என்று வேறு சொல்கிறது என்பதெல்லாம் இஸ்லாம் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகள். வேறு எந்த மதமும் இஸ்லாமைப்போல பெண்களுக்கு சொத்துரிமை தந்தது இல்லை என்பதையும் கூடவே இஸ்லாம் நான்கு பெண்களை நால்வரையும் சமமாக நடத்த முடியும் என்கிற பட்சத்திலேயே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொன்னது என்பதோடு சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். மொத்தமுள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகங்களில் வெறும் முன்னூறு மட்டுமே கட்டாயமான வாசகங்கள்.
இந்தியாவை பொறுத்தவரை வடக்கில் காசிம்,கஜினி,கொரி ஆகியோர் பெரும் கொள்ளைகள் மற்றும் கோயில் இடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை ! அதே சமயம் எக்கச்சக்க ஹிந்து மன்னர்களும் போர் சமயங்களில் எதிரி நாட்டு கோயில்களை எப்படி சூறையாடினார்கள் என்று கல்ஹானர் பதிவு செய்து வைத்திருக்கிறார். பாபர் மற்ற மதத்தின் மக்களின் உணர்வுகளை மதி,அவர்களின் வழிபாட்டு தலங்களை எந்த தருணத்திலும் சேதப்படுத்தாதே என்று தன் மகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அகபர் ஆறில் ஐந்து பேர் இந்துக்கள் அவர்களோடு நட்பாக இருப்பேன் நான் என்று உறுதியோடு நின்றார். ஜகாங்கீர் மதமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக் தடையே செய்தார். அவுரங்கசீப்,மாலிக் கபூர் என்று ஒரு சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் பெரும்பாலும் அமைதியான இணக்கமான ஆட்சியையே இஸ்லாம் மதத்தை பின்பற்றிய மன்னர்கள் தந்திருக்கிறார்கள்.
இஸ்லாம் மதம் இந்தியாவில் எவ்வாறு பரவியது என்பதிலேயே மூன்றாக பிரித்துதான் பார்க்கவேண்டும். வடக்கில் போர்களின் மூலம் உள்ளே நுழைந்த மன்னர்களின் அமைச்சரவையில்,பதவிகளில் இடம்வேண்டும் என்று மதமாற்றங்கள் நடந்தன என்பது ஒருபுறம். ஜிசியா வரி வேறு கிடையாது என்பதும் பலரை இஸ்லாமை நோக்கி செலுத்தியது. தெற்கில் வியாபாரத்தால் தான் இஸ்லாம் பரவியது. ஜாதிய கட்டமைப்பை முற்றாக ஆரம்பகாலத்தில் இந்தியாவில் நிராகரித்த இஸ்லாம் கவர்ச்சியானதாக மக்களுக்கு இருந்தது.
கேரளாவில் கடற்கரையோரம் போர் புரியும் மற்ற நாட்டவரை சமாளிக்க ஹிந்துக்கள் அவர்களின் சனதான தர்மப்படி போகமாட்டார்கள் என்பதால் அரசராக இருந்த ஜமோரின் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதை ஊக்குவித்தார்.
கூடவே,வங்கத்தில் காடாக இருந்த நிலங்களை எக்கச்சக்க பேருக்கு மானியமாக முகலாயர்கள் தரவே அதைப்பெற இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள் பலர். சிட்டகாங்கில் நடந்த வியாபாரமும் இஸ்லாம் பரவ முக்கிய காரணம். சுபி துறவிகளும் இஸ்லாமி எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.
பலபேரால் உறுதி செய்யப்பட்ட ஒரு தகவல் அதிர்ச்சியாகவும் இஸ்லாம் வாளால் பரவியது என்கிற வாதத்துக்கு எதிரானதாகவும் இருக்கும். வெள்ளையர் இந்தியாவை முழுமையாக பிடிப்பதற்கு முந்திய முகலாயர் ஆட்சி வரை இஸ்லாமியர்கள் எழில் ஒருவர் என்கிற எண்ணிக்கையிலேயே இருந்தார்கள். பின்னர் ஐரோப்பியர் பலம்பெற்று எழ ஆரம்பித்த காலத்தில் ஆறில் ஒருவர் என்றானார்கள். விடுதலையை நோக்கி நாடு நகர்ந்த பொழுது ஐந்தில் ஒருவர் என்று அவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது. வெளிநாட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்கிற வாதத்தை வைக்கும் பலரும் தாங்களும் அவ்வாறே ஒரு காலத்தில் வெளியே இருந்து வந்த முன்னோர்களை கொண்டவர்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். கூடவே,இங்கே இருந்து இந்துக்கள் தான் இஸ்லாம் மதத்துக்கு பெருமளவில் மாறினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
இஸ்லாம் மதத்தில் இந்து மதம் அளவுக்கு வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் அங்கேயும் இந்து மதத்தின் தாக்கத்தில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. எந்த வகையான வேறுபாடுகளையும் பாராட்ட கூடாது அனைவரும் சகோதரர்கள் என்ற நபிகள் நாயகத்தின் பெயராலேயே வேறுபாடுகள் உண்டானது தான் சோகமானது. அவரின் வழித்தோன்றல்கள் அல்லது நெருங்கிய உறவுகள் என்று சொல்லிக்கொண்டவர்கள் அஷ்ரப்கள் இந்தியாவில் இருந்து மதம் மாறியவர்கள் அஜ்லப்கள். உயர்ஜாதி ஹிந்துக்கள் இஸ்லாமுக்கு மாறிய பொழுது தங்களையும் அஷ்ரப் என்று அறிவிக்குமாறு அக்பரை ஊக்குவித்து சாதித்தார்கள். மிர்ஸா என்பவர் உருவாக்கிய அகமதியா பிரிவு பாகிஸ்தானில் நிராகரிக்கப்பட்டது. மிர்சா ஒரு காலத்துக்கு அப்புறம் தன்னையே இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டது அதற்கு காரணம்.
இஸ்லாமியர்கள் இந்துக்களின் ஜாதியைப்போல தங்களின் பிர்தாரிக்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள்.
நான்கு முக்கியமான சீர்திருத்தவாதிகள் இஸ்லாமுக்கு பிரிக்கப்படாத இந்தியாவில் கிடைத்தார்கள். சையீத் அகமது கான் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு ஆரம்பகாலங்களில் பாடுபட்டதும் பின்னர் காங்கிரஸ் உருவாக்கம் அதன் இஸ்லாமிய தலைவர் மற்றும் தன்னுடைய அலிகார் கல்லூரிக்கு ஆங்கிலேயே அரசு கொடுத்த நிதியுதவி எல்லாமும் சேர்ந்து முஸ்லீம்களும்,இந்துக்களும் வேறு என்று பேச ஆரம்பித்தார்,. அவர்கள் சேர்ந்தே இருக்க முடியாது என்றும் முழங்கினார். என்றாலும் குர்ஆனில் சொன்னவை எல்லாமும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் நம்முடைய பகுத்தறிவை பயன்படுத்தவேண்டும் என்று அவர் அறிவித்தார்.
இஸ்லாமியர்கள் அரசுப்பணியில் சேர கல்வி பயில வேண்டும் என்றும் அவர் முழங்கினார். இக்பால் ஜனநாயகத்தை முற்றாக நிராகரித்து இஸ்லாமிய சட்டப்படியே அரசு நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். அபுல் கலாம் ஆசாத் மட்டும் பலகோடி மக்கள்தொகை கொண்ட நாம் சிறுபான்மையினர் இல்லை இந்தியா என்கிற தேசத்துக்குள் இணைந்திருப்போம் என்று சொன்னார் –கேட்கத்தான் ஆளில்லை. அல்தாப் ஹுசைன் வாலி எனும் நான்காவது சிந்தனையாளர் தான் மிக முக்கியமான ஆனால் அவ்வளவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத ஆளுமை. இந்தியா என்கிற தேசத்துக்குள் இருந்து கொண்டே உயர்கல்வி மற்றும் அறிவியல்,தொழில்நுட்பம் ஆகிய கல்விகளை பெற்று இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வாழ்நாள் முழுக்க வலியுறுத்தினார் அவர்.
பெரும்பாலான மதக்கலவரங்கள் இந்து-முஸ்லீம் சிக்கலாக ஒற்றைப்படையாக பார்க்கப்படுகின்றன. அப்படி மட்டுமே அதைப்பார்க்க கூடாது என்று ஆசிரியர் எண்ணற்ற ஆதாரங்களை அடுக்குகிறார். வளர்ச்சியின்மை,பொருளாதாரத்தில் இன்னொரு மதத்தவர் முன்னேறி இருப்பது,நிலத்தை கைப்பற்றும் குறுக்கு வழி ஆகியன முக்கியமான காரணங்கள் என்று சொல்லி மாப்ளா கிளர்சிகள் நிலமில்லாத இஸ்லாமியர்கள் நாயர் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக செலுத்திய போராட்டம் ; ஜபல்பூரில் பீடி தொழிலில் உண்டான போட்டி மதக்கலவரத்துக்கு விதைபோட்டது.
ராஞ்சியில் உருதுவை இரண்டாவது மொழியாக ஆக்க கிளம்பிய எதிர்ப்பு இஸ்லாமியர்களின் நிலங்களை ஹிந்துக்கள் எடுத்துக்கொள்வதில் முடிந்தது. பீகார்ஷாரிபில் நடந்த கலவரங்கள் இஸ்லாமியர்களின் கல்லறை இருந்த நிலத்தை கைப்பற்றும் செயலில் முடிந்தது. மொராதாபாத்தில் அதிகமான வருமானத்தை இஸ்லாமிய தொழிலாளர்கள் பெற்றுக்கொண்டு இருந்தது உண்டாக்கியது. பிரிவினைக்கு முந்திய இஸ்லாமிய அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய பதிவு செய்திருக்கிறேன் என்பதால் இந்த நூலைப்பற்றிய இரண்டாவது கட்டுரையில் பிரிவினைக்கு பிந்திய அரசியல் மற்றும் இஸ்லாமியர்கள் தற்பொழுது செய்யவேண்டியது என்ன என்று ஆசிரியர் வாதிடுபவற்றை பார்க்கலாம்
இந்திய முஸ்லீம் லீக் அமைப்பு விடுதலைக்கு பின்னர் உருவானதும் தனித்தொகுதிகள் கேட்ட பொழுது அதை படேல் நிராகரித்தார். இஸ்லாமியர்களின் தலைவராக ஆகி அவர்களின் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்திருக்கும் வாய்ப்பை ஆசாத் தவறவிட்டார். நேருவின் எதிர்ப்பையும் மீறி பீகார்,உ.பி மற்றும் மத்திய மாகாணங்கள் உருதுவை பலபேர் பேசினாலும் வெறும் இந்தியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன. ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டு ஒரு ஆறாத வடுவுக்கு வழிகோலின. அது நடந்ததை வேடிக்கை பார்த்த ஜி.பி.பந்த் இஸ்லாமியர்களை போலீஸ் வேலைக்கு எடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார்.
அறுபத்தி ஏழில் இஸ்லாமியர்களுக்கு பெரிதாக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்கிற கோபம் எதிரொலிக்க மற்றவர்களுக்கு ஓட்டுபோட்டார்கள் இஸ்லாமியர்கள். அது ஆர்.எஸ்.எஸ் சின் அரசியல் வால் ஜனசங்கத்திருக்கு சாதகமாக அமைந்து முப்பத்தி ஐந்து தொகுதிகளில் ஜெயித்தார்கள். எக்கச்சக்க மதக்கலவரங்கள் நடக்கவே மீண்டும் காங்கிரஸ் பக்கமே போனார்கள்.
எமெர்ஜென்சியின் பொழுது இஸ்லாமியர்கள் பலர் கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளானது,காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்த்தது. ஹிந்து கோயில்களுக்கு போக ஆரம்பித்தது,காஷ்மீரில் நடப்பது தர்ம யுத்தம் என்று இந்திரா முழங்கியது எல்லாமும் அவரின் அரசியலை நேருவின் மதச்சார்பற்ற அரசியலை விட்டு நகர்த்தி இஸ்லாமியர்களை மற்றவர்களுக்கு ஓட்டுப்போட வைத்தன. கூடவே ராஜீவ் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்த ஷா பானு வழக்கின் தீர்ப்பை மாற்றும் வகையில் ஒருபக்கம் சட்டமியற்றி விட்டு இன்னொரு புறம் பாபர் மசூதி கதவுகளை திறந்துவிட்டார்.
பாபர் மசூதி இடிப்பில் வலதுசாரிகளால் வைக்கப்படும் ஒரு முக்கிய வாதம் மசூதியை இடிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை என்பது தான். ஆனால்,இன்டெலிஜென்ஸ் பீரோவின் முன்னாள் துணை இயக்குனர் எம்.கே.தார் பி.ஜே.பி/சங் பரிவார் ஆகியோர் நிகழ்த்திய கூட்டத்தில் வைக்கப்பட்ட ஒட்டுகேட்கும் கருவிகள் ப்ரல்யா ந்ருதியா எனும் அழிப்பின் நடனத்தை நிகழ்த்த வேண்டும் என்று தெளிவாக வகுத்துக்கொண்டே களமிறங்கின அதை லிபரான் கமிஷன் கணக்கிலேயே எடுத்துக்கொண்டு அவரை சாட்சியத்துக்கு அழைக்கவில்லை என்றும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த கலவரங்களுக்கு பின்னர் சிவசேனா அதை அப்படியே மும்பையில் மதக்கலவரங்கள் தூண்ட பயன்படுத்திக்கொண்டது. இஸ்லாமியர்கள் தொடர்ந்து இந்துக்களை உசுப்பேற்றிக்கொண்டே இருந்தார்கள். அதை அவர்கள் இப்பொழுது கலவரங்களின் மூலம் அறுவடை செய்கிறார்கள் என்று தலையங்கம் எழுதினார் பால் தாக்கரே.
ஆறு வருட காலம் ஆட்சியில் இருந்த பிஜேபி அந்த காலத்தில் பாட புத்தகங்கள்,பல்வேறு பதவிகள்,மீடியா என்று சகலத்திலும் காவி மயம் ஆக்கியது. குஜராத் கலவரங்கள் இன்னுமொரு காயமாக மாறிப்போயின. மிக அரிதான தருணங்களை தவிர பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மதசார்பற்ற தன்மையை கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் கட்சிகளுக்கே பெரும்பாலும் ஓட்டளிக்கிறார்கள். மலப்புரமில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் மதச்சார்பின்மை பேசி இஸ்லாமிய பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை கம்யூனிஸ்ட்கள் பெற முடிந்தது !
இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் போல இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்திற்குள் இன்னமும் வரவேயில்லை. இந்த இரு காயங்களுக்கு பின்னர் அதை சாதிப்பது இன்னமும் கடினமான பணியே ! அலிகார் பல்கலை எல்லாருக்குமான பல்கலையாக இருந்ததை மாற்றி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அது என்று சொல்லி அதன் மூலம் மதவாதத்தை வளர்ப்பதை அமைதியாக செய்தார்கள் ஆட்சியாளர்கள்.
இஸ்லாமியர்களுக்கு கல்வி தருவதில் மிக முக்கிய பங்கை மதரசாக்கள் ஆற்றுகின்றன. அவை தரமான கல்வியை தராமலே இருக்கின்றன. இதனால் பொருளாதரத்தில் முன்னேறும் வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கு கிடைக்காமல் போகிறது. ஓரளவுக்கு பணமிருப்பவர்கள் இயல்பான பள்ளிகளை நோக்கி நகர்வது இப்பொழுது அதிகரித்து உள்ளது. இஸ்லாமியர்கள் மீது ஒரு வகையான வெறுப்புணர்வை அவர்களின் நம்பிக்கையை அவர்கள் தீவிரமாக் கொண்டிருப்பதன் மூலம் பிற மதத்தவர்கள் உண்டாக்கி வைத்திருப்பதையும் பதிவு செய்கிறார்.
இஸ்லாமியர்கள் தங்களுக்கான கல்வி அமைப்புகளை உருவாக்கி கல்வியை பரப்புவதை தெற்கு அளவுக்கு வடக்கில் செய்யவில்லை என்பது ஒரு கவனிக்கத்தக்க அம்சம். வக்ஃப் வாரியங்களின் கோடிக்கணக்கான சொத்துகள் ஒழுங்காக தணிக்கை செய்யப்பட்டு அவர்களின் மக்களின் சமூக,பொருளாதார முன்னேற்றத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்கள் தீட்டுவது அவசியம். இஸ்லாமும்,இந்து மதமும் தனித்தனியானவை என்று விஷம பிரச்சாரம் தொடர்ந்து இங்கே பரப்பப்பட்டு வருகிறது. சுபிக்கள் ஹிந்து மற்றும் இஸ்லாமியர்கள் இருவருக்கும் பொதுவானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்து-இஸ்லாமியர்கள் என்று குஜாரத்தில் இருபது வருடங்களுக்கு முன் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இரண்டு லட்சம் பேர் பதிந்து கொண்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவின் ஓவியக்கலை,கட்டிடக்கலை,இசை,உணவுப்பொருள்கள்,மொழி ஆகிய அனைத்திலும் இஸ்லாம் ஆற்றிய பங்குகள் மிகப்பெரிது.
மேற்கின் மதசார்பின்மை என்பது அரசும்,மதமும் பிரிந்திருப்பதாகவே இருந்தது. ஒற்றை மதம் என்பதால் அப்படி சொல்வது சுலபமாக இருந்தது. இந்தியாவில் அப்படிப்பட்ட அணுகுமுறை சாத்தியமில்லை என்கிற யதார்த்தத்தை நேரு மற்றும் காந்தி உணர்ந்திருந்தார்கள். எல்லா மதங்களுக்கும் சம மரியாதை என்று அவர்கள் அறிவித்தார்கள். சிறுபான்மையினரின் மதவாதம் பயத்தில் வருகிறது என்று புரிந்து கொள்ளலாம் அதை நிவர்த்தி செய்வது நம் கடமை என்று நேரு இயங்கினார்.
நபிகள் காலத்தில் வேற்று மதத்தவர் பெரும்பான்மையாக இருக்கிற இடத்தில் எப்படி இஸ்லாமியர்கள் செயல்படவேண்டும் என்று குறிக்கப்படவில்லை. தன்னுடைய நம்பிக்கையை காப்பாற்ற புனிதப்போர் செய்யவேண்டும் என்று சிக்கலான சூழலில் சொல்லப்பட்டதை இன்றைக்கு தீவிரவாத இயக்கங்கள் பற்றிக்கொண்டு செயல்படுகின்றன. இஸ்லாமிய சர்வதேசியம் வந்த பிறகு அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து இருக்கின்றன.
இந்தியாவில் வருந்தத்குந்த சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்திருக்கலாம். அதே சமயம் இஸ்லாம் கூட்டமைப்பில் இருக்கும் ஐம்பத்தி ஏழு நாடுகளை விட இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாகவே இருக்கிறது ; சிவில் சட்டத்தில் இன்னமும் அவர்கள் நினைக்கிறபடியே இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வலதுசாரிகள் எல்லை மீற முயற்சி செய்தால் பெரும்பான்மை மக்கள் அதை நிராகரிக்கிறார்கள். சம உரிமைகள்,ஓட்டுரிமை எல்லாமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை போதாது அதே சமயம் இதற்குள் இருந்தே வெல்ல முடியும் என்பதை உணர்ந்து எல்லா மதத்தவரும் இணைந்து நகரவேண்டும். இஸ்லாமை பற்றி தவறான எண்ணங்களை உண்டு செய்யும் சக்திகளை மதத்துக்குள் இருக்கும்ஆட்கள் மற்றும் பீடங்களே எதிர்க்க வேண்டும். ஷாரியத் என்பதை தீனை விட முன்னிறுத்தி செயல்படுகிற போக்கை விட்டு நகர்ந்து இன்னமும் ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைந்து செயலாற்ற அவர்கள் முனைகிற அதே சமயம் மற்ற மதத்தவர்களும் வெறுப்பை தாண்டி உண்மையை உணர்ந்து நேசித்து இணைந்து வாழவேண்டும் என்று முடிகிறது.
Thanks :- கவிஞர் முத்தரசன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-