அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜன.31:
பெரம்பலூரில் பருத்தி விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து போலி கையெழுத்திட்டு 4 முறையாக ரூ.28,000த்தை சுருட்டிய மர்ம ஆசாமி 5வது முறையாகத் திருட முயன்ற போது சிக்கினான்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட  மங்களமேடு சேர்ந்த பருத்தி விவசாயி கருப்பையா(60). இவருக்கு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கனரா வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளது. இவர் கடந்த சில வாரங்களில் அறு வடை செய்த பருத்தி விற்ற பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைத்திருந்தார். இதில் வீட்டு செலவுக்குத் தேவையெனக் கருதி கடந்த 23ம்தேதி துறை மங்கலம் கனரா வங்கிக்குப் பணம் எடுக்க வந்துள்ளார். 23ம் தேதிக்கு முன்பு வரை அவரது வங்கிக் கணக்கில் ரூ.52,724 பணம் இருப்பு இருந்துள்ளது. வங்கிக்கு வந்த கருப்பையா தனக்கு அருகே 50 வயது மதிக்கத்தக்க வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10ஆயிரம் பணம் பெறுவதற்கான வித்ட்ரா படிவத்தைக் கொடுத்து பூர்த்தி செய்து தரும் படி கேட்டுக் கொண்டார்.

இதற்காக கருப்பையாவிடமிருந்து வங்கி பாஸ் புத்தகத்தை வாங்கி, அதிலுள்ள வங்கிக் கணக்கு எண்ணைக் கொண்டு படிவத்தைப் பூர்த்தி செய்த ஆசாமி, கருப்பையாவின் பாஸ் புக் நெம்பரை ரகசியமாகக் குறித்துக் கொண்டு, பூர்த்தி செய்தப் படிவத்தை அவரிடம் கொடுத்து, கீழே கையெழுத்துப் போடச் சொல்லியுள்ளார். அப்போது கருப்பையா போட்ட கையெழுத்தையும் நோட்டமிட்டுள்ளார். 
கருப்பையா வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம் எடுத்தது போக அன்று மதியம் வரை ரூ.42,724 இருப்பு இருந்துள்ளது.
அன்று மாலை அந்த ஆசாமி கருப்பையாவின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான வித்ட்ரா படிவத்தைப் பூர்த்தி செய்து, அதில் கருப்பையா 23ம் தேதி போட்டது போல் போலியாக கையெழுத்தும் போட்டுக் கொடுத்து ரூ.4,000 பணத்தை எடுத்துள்ளார். வங்கி ஊழியர்கள் ஆசாமியிடம் எந்தக் கேள்வியையும் எழுப்பாமல் பணம் கொடுத்துள்ளனர்.
இதனால் துணிச்சலான அவர் கடந்த 27ம் தேதி அதே துறை மங்கலம் கனரா வங்கிக்கு வந்து, கருப்பையாவின் வங்கிக் கணக்கில் இருந்து காலையில் ரூ.12,000 த்தையும், மதியம் 2 முறை தனித்தனியாக ரூ.6,000 என ஒரே நாளில் ரூ.24,000த்தை எடுத்துள்ளார்.


இதனிடையே 28ம்தேதி வங்கிக்கு வந்த கருப்பையா, மேலும் பணமெடுக்க பாஸ் புத்தகத்துடன் வந்த போது, அவரிடம் கோபமாகப் பேசி எரிந்து விழுந்த வங்கி ஊழியர் நேற்று தானே ரூ.24,000 எடுத்தீர்கள். இனி அடுத்த வாரம் வந்து பணமெடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி விரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி நான் 10,000 மட்டும் தானே பணமெடுத்துள்ளேன். எதற்கு ரூ.24,000 எனக் கூறுகிறீர்கள் என கேட்டும் வங்கியாளர்கள் அதை காதில் வாங்க வில்லை.
இந்நிலையில் நேற்று(30ம்தேதி) தனது உறவினர்கள் சிலருடன் வங்கிக்கு வந்த கருப்பையா, வங்கியாளர்களிடம் தனது பண இருப்பு விபரங்களைத் தெரிவிக்கும் படி கேட்டுள்ளார். இதனால் கருப்பையாவின் வங்கிக் கணக்கைப் பார்வையிட்ட வங்கியாளர்கள், உங்கள் கணக்கில் 27ம் தேதி ரூ.24,000 பணம் எடுத்துள்ளீர்களா, நல்லா நினைவு படுத்தி பாருங்கள் எனக் கேட்டுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கருப்பையா மற்றும் அவரது உறவினர்கள் வங்கி நாற்காலிகளில் அப்படியே அமர்ந்து விட்டனர்.
அப்போது அதே மர்ம நபர் வங்கிக்கு வந்தார். கருப்பையா வந்திருப்பதை அறியாத அந்த ஆசாமி, கருப்பையா வங்கிக் கணக்கில் மேலும் பண மெடுக்க முயன்றுள்ளார். அப்போது வங்கியாளர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர். கருப்பையாவை அழைத்து, உங்கள் வங்கி கணக்கில் இவர் தான் பணமெடுக்க வந்துள்ளார், இவரை உங்களுக்குத் தெரிகிறதா எனக் கேட்டுள்ளனர். 

உடனே கருப்பையா, இவர் தான் 23ம் தேதி பணமெடுக்க சலான் எழுதிக் கொடுத்தார் எனக் கூறவும், அந்த ஆசாமி அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
உடனே வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் அந்த ஆசாமியை பிடித்துக் கொண்டனர். 

பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த குமார்(50)என்பதும், இவருக்கு கருப்பையா கணக்கிலிருந்து பாஸ்புக் இல்லாமல் பணம் வழங்கியது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் கார்த்திக் என்பதும் தெரிய வந்துள்ளது. 
பின்னர் அவரை போலீசார் பிடித்து சென்றனர்.
இது குறித்து அங்கு வந்த தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்ல துரை கூறும் போது, தேசிய வங்கியில், பாஸ் புக் இல்லாமல் பணமெடுக்க முடியாதென பொது மக்களை விரட்டுகிற வங்கியாளர்கள், அந்த ஆசாமிக்கு எப்படி 4 முறையில் ரூ.28ஆயிரம் பணமெடுக்க அனுமதித்தனர் என்பது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கலெக்டரிடம் முறையிடவுள்ளோம் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-