அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஒரு பத்திரிகையாளர் என்பவர் செய்தியை முதன்மையாகத் தருவதோடு, அதில் உண்மைத் தன்மையையும் சேர்த்து தர வேண்டும். அதுதான் இதழியல்.

ஆனால், நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக தகவல் வெளியிட்டதில், செய்திகளை முந்தித் தருகிறேன் என்று கூறி தனியார் செய்தி சேனல்கள் நேற்று ஆதாரமற்ற, நம்பகத்தன்மை அற்ற செய்திகளை வெளியிட்டு மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடி விட்டன.அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து சமூக வலைதளங்கள், ‘வாட்ஸ்அப்’, ‘டுவிட்டர்’ போன்ற தளங்களில் முதல்வரின் உடல்நிலைகுறித்து சில விஷமிகள் வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.

பால் விலை ரூ.200 ஆக உயர்ந்துவிட்டது, மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும், காய்கறி கிடைக்கவில்லை, ராணுவம் விரைகிறது, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மக்களை பதற்றத்தில் உறைய வைக்கும் தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

இதைக் கண்காணித்த மாநில அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மறுத்து செய்தி வௌியிட்டது. அதேசமயம், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தவறான செய்திகளையும், வீண் புரளிகளையும் பரப்பக்கூடாது.

மக்களுக்கு பதற்றத்தையும், சமூக அமைதியையும் குலைக்கும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது. இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும். அந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்தனர்.

ஆனால், இந்த எச்சரிக்கை வலைதளம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தான், எங்களுக்கு இல்லை என்று கூறும் வகையில் செய்திசேனல்கள் நேரலை மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை விவரத்தை தெரிவித்தனர்.அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தது. அதன்பின், அனைத்து செய்தி சேனல்களின்சங்கமிக்கும் இடமாக, அப்பல்லோ மருத்துவனை வளாகம் அமைந்துவிட்டது.

நிமிடத்துக்கு நிமிடம், மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் வித்தியாசமாக கோணத்துடன், புதுப்புது விவரங்களுடன் செய்திகளை அளிக்க ஒவ்வொரு சேனல்களும் முந்திக்கொண்டன. தங்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், செய்திகளை முந்தித் தந்து மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற பசியோடு செய்திகளை வௌியிட்டு வந்தன.

தங்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப்படுத்திக்கொள்ள செய்திகளை அனைத்து கோணத்திலும் சேனல்கள் அனுகின. அப்பல்லோ மருத்துவமனையின் துணை இயக்குநர் முதல் பணியில் இருக்கும் போலீசார் வரை அனைவரையும் டுவிட்டர் முதல் தனிப்பட்ட தொலைபேசி முதல் தொடர்பு கொண்டு செய்திகளை துருவி எடுத்து தங்களின் இதழியல் ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டின.

சேனல்களின் ‘பிரேக்கிங் நியூஸ்’ இசையை ஒவ்வொரு முறை கேட்கும்போதெல்லாம் சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி, சக பத்திரிகையாளர்கள் வரை அனைவரின் மனதையும் ‘திக்’, ‘திக்’ என்று அடிக்க வைத்தது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த அப்பல்லோ அறிக்கை,லண்டன் டாக்டர் பீலே அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு மக்களை பரபரப்பின் உச்சத்துக்க கொண்டு வந்தன.முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, மிக மோசமாக இருக்கிறது, மிக,மிக மோசமாக இருக்கிறது என்று செய்தியை வெளியிட்டவாறு சேனல்கள் இருந்தன.

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதற்கு மாறாக, மறைமுகமாக பதற்றத்தையும், பீதியையும் கிளப்பின.

இறுதியாக மாலை 5 மணிக்குள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பார் என்று செய்தி வெளியிட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை செயற்கையாக முடக்கத் தொடங்கின.

தமிழகத்தின் அனைத்து மக்களும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த நல்ல செய்தியை எதிர்பார்த்திருந்த நிலையில், எந்த விதமான ஆதாரமும், அரசு அறிவிப்பும் இன்றி ஒரு செய்தி சேனலில்முதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என்று செய்தி வெளியானது.

இந்த செய்தி வெளியான அடுத்த சில வினாடிகளில் இந்த செய்தியின் நம்பகத்தன்மை, உண்மைத்தன்மையைக் கூட விசாரிக்காமல், மற்ற செய்தி ேசனல்களும் தொடர்ந்து இதே நம்பகபற்ற செய்தியை வெளியிட்டன.

இந்த செய்தியை நம்பிய பொதுமக்களும், வர்த்தகர்களும் பீதியும், பதற்றமும் அடைந்து, அவசர, அவசரமாக வீடுகளுக்கு திரும்பினர். மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்து ஏற்கனவே மிகவும் சோகத்துடன், கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தீவிர விசுவாசிகளும் இந்த செய்தியைக் கேட்டு உடைந்து அழுதனர். கதறினர், தரையில் விழுந்து புரண்டனர். தங்களின் மார்பிலும், முகத்திலும், அடித்துக்கொண்டு அழுதனர்.

இந்த செய்தியைக் கேட்டு புதுக்கோட்டை மாவட்டம்,அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் முதல்வரின் மரணச் செய்தி கேட்டு மாரடைப்பால் சுருண்டு விழுந்து இறந்தார்.

இந்த செய்தியால், அப்பல்லோ மருத்துவமனையில் குழுமி இருந்த தொண்டர்கள் ஆவேசமடைந்து, அங்கிருந்த தடுப்புகளையும் ஸபெயர்பலகைகளையும் அடித்து, உடைத்து ரகளையில் ஈடுபட்டனர், இதனால் அங்கு பெரும் கலவரம் எழும் சூழல் உருவானது ஆனால், போலீசாரின் தீவிர நடவடிக்கையால், அங்கு சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆளுரின் அதிகாரப்பூர்வ அறிக்கை வராமல், தன்னிச்சையாக அந்த செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டதை அறிந்து, அப்பல்லோ மருத்துவமனை மறுப்பு செய்தி வெளியிட்டது.

முதல்வர் ஜெயலலிதா சிறப்பு மருத்துவ நிபுனர்கள் கண்காணிப்பில்தான் தொடர்ந்து இருக்கிறார். அவரின் உடல்நிலைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருசில செய்தி சேனல்களில்வந்த செய்தி தவறானவை என மறுப்பு அறிக்கை அளித்தது.

தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளில் உண்மைத்தன்மை நிரம்பி இருக்கும் என்று நம்பி அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த சாமானிய மக்கள் இரு வேறு செய்திகளால் பெரும் குழப்பம் அடைந்தனர். எதை நம்புவது, எதை தவிர்ப்பது, யாரிடம் விளக்கம் கேட்பது என கிராமம் முதல், நகரம் வரை அனைத்து மக்களும் குழம்பினர்.

இறுதியாக அப்பல்லோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்து, அனைத்து செய்தி சேனல்களும் இதே செய்தியை ஒருசேர உரக்க ஒலித்தபின் மக்கள் மத்தியில் பரபரப்பு அடங்கியது.

இந்த பிரச்சினைக்கு காரணம் யார்? என்று பார்த்தால் மக்கள் தான்.

நாம் எந்த சேனலை ஆதரித்து வளர்க்கிறோம் என புரிந்து கொள்ள வேண்டும். தவறான செய்தியை வெளியிட்டது யார், அந்த செய்தியை உறுதி செய்ய காத்திருந்த சேனல்கள், பத்திரிகைகள் யார் என புரிய வேண்டும்? எப்போதும் பரபரப்பு, பரபரப்பு என காட்டுவதைப் பார்ப்பதை தவிர்த்து, பொறுமையாக, நிதானமாக, செய்தியில் தவறு வந்துவிடக் கூடாதே என கவனமாக செய்தி வெளியிடும் சேனல்களைபார்த்து ஆதரிக்க வேண்டும்.

பத்திரிகைகளிலும் அப்படி நேர்மையான, இப்போதைக்கு ஓரளவு நேர்மையான பத்திரிகைகளை ஆதரிக்கிறோமோ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும் ? பரபரப்பா ? ஆபாசமா ? உண்மை செய்தியா ? முடிவு செய்யுங்கள். வீணாக திட்டுவதோடு, சிந்திக்கவும் செய்யுங்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-