அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் மக்களே உஷார் உங்களுக்கு போன் கால் வந்து யாராவது நான் வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்தால் உங்கள் ATM எண்ணை கேட்டால் நம்பர் கொடுக்கவேண்டாம் ஏன் என்றால் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதன் செய்தி கீழே கொடுத்துள்ளேன் படித்துப்பாருங்கள் மற்றவருக்கும் ஷேர் பண்ணுங்க 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 58) இவர் வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பென்னக்கோணம் கிராமத்தில் உள்ள வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். 

அதேபோல் லப்பைக்குடிக்காடு வங்கி கிளையிலும் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். இரண்டு வங்கிகளிலும் முறையே ரூ.45ஆயிரத்தி 996ம் ரூ.54 ஆயிரத்து 997ம் பணம் இருப்பு வைத்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 18ந் தேதி காலை 10.27 மணிக்கு ஒரு தொலைபேசியில் இருந்து வீரபாண்டியன் தொலைபேசி எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்தது. 

அப்போது உங்களது வங்கி கணக்கு ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டு உள்ளது. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஏ.டி.எம் கார்டில் உள்ள 16 இலக்க எண்ணை கூறுங்கள் என்று கேட்டனர். 
அதன்படி ஏ.டி.எம் எண்களையும் பின்புறம் உள்ள கடைசி மூன்று எண்களையும் கூறினார். பின்பு வேறு ஏதாவது வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றீர்களா என்றும் கேட்டனர். 

அதற்கு ஆமாம் என்று கூறி மற்றொரு ஏ.டி.எம் கார்டில் 16 இலக்க எண் மற்றும் பின்புறம் உள்ள கடைசி 3 எண்னையும் கூறினார். மேலும் தற்போது உங்களது தொலை பேசி எண்ணிற்கு 6 இலக்க எண் வரும். 

அவற்றை உடனடியாக கூறினால் உங்களுடைய ஏ.டி.எம் கார்டு லாக் ஆகாது என்று கூறியதன் பேரில் 6 இலக்க எண்ணையும் வீரபாண்டியன் கூறினார்.
அதன் பின்பு அதே தேதியில் அவரது பென்னகோணம் வங்கி கிளை கணக்கிலும், லப்பைக்குடிக்காடு வங்கி கிளை கணக்கிலும் உள்ள ரூ. 1 லட்சத்து 993 ஐ நான்கு, நான்கு முறையாக பணத்தை எடுத்து விட்டனர். 

பின்னர் வீரபாண்டியனுக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணத்தை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டு உள்ளார். 

அதற்கு நாளை 19 தேதி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி போனை துண்டித்து விட்டார். 
இது குறித்து உடனே அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் வீரபாண்டியன் கூறி உள்ளார். அப்போது ஞாயிற்றுகிழமை வங்கியில் இருந்து எப்படி தொடர்பு கொள்வார்கள் என்றும், ஏதோ ஏமாற்றும் பேர்வழி உள்ளவர்கள் ரகசிய எண்ணை கேட்டு அதன் மூலம் இரண்டு வங்கி கணக்குகளிலும் பணத்தை எடுத்து இருப்பார்கள் என்று கூறியதன் பேரில் அவரது கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரிய வந்தது. பின்னர் வீரபாண்டியன் இரண்டு ஏ.டி.எம் கார்டுகளையும் செயல்படா வண்ணம் லாக் செய்து உள்ளார்.
மேலும் இது குறித்து வீரபாண்டியன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டு சோனல் சந்தராவிடம், என்னை ஏமாற்றி மோசடி செய்யும் நோக்கில் விபரம் தெரியாத என்னிடம் ரகசிய எண்ணை கேட்டு பணத்தை நூதன முறையில் திருடி விட்டனர். 

மேலும் மோசடி செய்த நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தருமாறு புகார் மனு கொடுத்து உள்ளார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி-மாலைமலர்.காம் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-