அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவல் கிடைத்ததும், கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு   “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

 உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு  ஏற்கனவே சிகிச்சை அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ்  டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு  பேசினார்கள். 

அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

டாக்டர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உயிர்காக்கும் கருவிகள் மூலம்  அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா காலமானார்.   

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து -

* 6.12.2016 தொடங்கி 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்...

*  7 நாட்களுக்கு தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கும்... 

* எந்த அரசு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட  மாட்டாது...

தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் அறிவிப்பு...

  3 நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை.
 *செல்வி ஜெ ஜெயலலிதா வாழ்க்கை குறிப்பு*

தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள். 

ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 1/2 வயது ஆனபோது, தந்தை காலமானார்.  முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. 

பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார். 

1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். 

மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரை உலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். 

ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.

தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965-ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை" தான் அவரது முதல் தமிழ்ப்படம்.

வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த 'எபிசில்' (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.

முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார்.  சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் 'வேதா')

ஜெயலலிதாவின் 100-வது படமான "திருமாங்கல்யம்" 1977-ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1980-ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
 


அரசியல் ஈடுபாடு

டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுரைப்படி 1982ல் அ.இ.அ.தி.மு.க.வில் தொண்டராக இணைந்தார். 1983ல் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்தார். 1984ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989 வரை அவர் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கும் வரை அப்பதவியிலிருந்தார். டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலக்குறைவினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது 1984ல் ஜெயலலிதா அவர்கள் தனது தலைமையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தார். டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின் 1987ல் அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதைத் தொடர்ந்து 1989ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரனார். இரண்டாக உடைந்த அ.இ.அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் அமைந்தது.. அதைத்தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 1989ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் அ.இ.அ..தி.மு.க. இரட்டை இலை சின்னத்தை தனது தேர்தல் சின்னமாக பெற்றது. 1991ல் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்லில் காங்கிரசுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு 225 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை அ.இ.அ.தி.மு.க. பெற்றது. இந்த தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதிகளில் பெற்றி பெற்றார். பின்பு காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். சட்டமன்றத்திற்கு 2002ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

விருது & தலைப்புகள்

1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசு செல்வி ஜெயலலிதாவிற்கு “கலைமாமணி” விருது வழங்கி சிறப்பித்தது. சென்னை பல்கலைக்கழகம் 1991ல் டிசம்பர் 19ம் தேதி முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஐ.நா.சபையின் அதிகாரப் பூர்வ ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு குழு நன்மதிப்பு மற்றும் மேதகைமைக்கான “தங்க தாரகை” விருது வழங்கி சிறப்பித்தது.

அந்நிய நாட்டுப்பயணம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், நேபாளம்

பொழுதுபோக்குகள்

படித்தல், இசை,விவசாயம்.

வெளியீடுகள் / பங்களிப்புகள்

ஆங்கிலம்,தமிழ் ஆகிய மொழிகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.தமிழில் நான்கு முழு நீள நாவல்களும்,பல சிறு கதைகளும் எழுதியுள்ளார்
பொது, சமூக & பண்பாட்டு செயல்பாடுகள்
கிரிக்கெட்,டென்னிஸ்,நீந்துதல்,குதிரை ஏற்றம்,கூடைப்பந்து,சதுரங்கம்,உடற்பயிற்சி விளையாட்டுகள்

கூடுதல் தகவல்

இவர் தனது பள்ளி படிப்பை பெங்களூரிலுள்ள பிஷப் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார். 1964ம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்தார். இதனால் இவருக்கு இந்திய அரசின் கல்வி சலுகை கிடைத்தது. ஆனால் அதை இவர் ஏற்க மறுத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். பரத நாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இது தவிர மோகினி ஆட்டம், கதக், மணிப்பூரி போன்ற நடனங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசத் தெரிந்தவர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-