அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அரபு வசந்தத்தைத் தொடர்ந்து யெமன், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் தோற்றம் பெற்று தொடர்ந்த வண்ணமுள்ளன. 

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதும், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளாவதும் இரத்தம் சிந்துவதும் தொடர்கதையாகியுள்ளன.

அதனால் இலட்சக்கணக்கான மக்கள் தமது பாரம்பரிய வீடு வாசல்களையும் இருப்பிடங்களையும் விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். 

தற்போது கூட சிரியாவின் அலொப்போவிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இம்மக்கள் அயல் பிரதேசங்களிலும் அயல் நாடுகளிலும் மாத்திரமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் தஞ்சமடைகின்றனர்.

தற்போது அலொப்போவைப் போன்று ஏற்கனவே சிரியாவின் இட்லிப், கொபானி போன்ற பிரதேசங்களில் உக்கிர மோதல் இடம்பெற்ற சமயம் சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறிய மக்களில் ஒரு தொகையினர் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவுக்குள் சென்று கொண்டிருந்தனர். இந்தக் காலப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற பல படகுகள் மத்திய தரைக்கடலில் மூழ்கின. அதனாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் சுமார் நான்கு வயது மதிக்கதக்க அயிலான் குர்தி என்ற பச்சிளம் பாலகனும் ஒருவராவார். இவரது தந்தையைத் தவிர அவரது தாய், சகோதரன் உள்ளிட்ட மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அத்தோடு அயிலானின் சடலம் துருக்கி நாட்டுக் கரையோரத்தில் கரையொதுங்கி இருந்தது. இது தொடர்பான புகைப்படம் ஊடகங்களில் வெளியானதும் உலகில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டதோடு உலக மனிதாபிமானத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியது.

இவ்வாறான சூழலில் சிரியாவின் அயல் நாடான சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அகதிகளை மனித நேயம் கொண்டு ஏற்காததால்தான் இடம்பெயரும் மக்கள் உயிராபத்து மிக்க பயணத்தில் ஈடுபடும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன. ஆனால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தம் சகோதர மக்கள் முகம் கொடுத்துள்ள பேரவலங்களைக் கண்டும் காணாதது போன்று சொகுசாக வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக சவூதி அரேபியா, தம் அயல்நாட்டு சிரிய, யெமன் சகோதர மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இம்மக்களை மனிதாபிமானக் கண்கொண்டு நோக்கக் கூடாதா? இம்மக்களுக்காக தம் மண்ணில் ஒரு முகாமையாவது அமைத்து அவர்களை பராமரிக்கக் கூடாதா? என்றவாறெல்லாம் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை சவூதி அரேபியாவோ ஏனைய நாடுகளோ கண்டு கொண்டதாக அச்சமயம் காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் ஆதில் பின் அஹ்மத் அல் ஜுபைர், சிரியாவிலும் யெமனிலும் இடம்பெயரும் மக்கள் தொடர்பில் சில உண்மைகளை அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்த உண்மைகள் இந்த அகதிகள் விவகாரத்தில் சவூதிய அரேபியாவை காராசாரமாக விமர்சித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியவர்களை மெய்சிலிர்க்க வைத்து வெட்கித்து தலைகுனிய வைத்திருக்கும். அந்தளவுக்கு உணர்வுபூர்வமான உண்மைகள்.

அதாவது “ சிரிய போர் ஆரம்பமானது தொடக்கம் இற்றைவரையும் 24 இலட்சம் சிரிய அகதிகளும், கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் பத்து இலட்சம் யெமன் நாட்டு அகதிகளும் சவூதி அரேபியாவுக்குள் இடம்பெயர்ந்து அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாடசாலைகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன“ என்று வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வளவு பெருந்தொகை அகதிகளுக்கு சவூதி அரேபியா அடைக்கலம் கொடுத்திருக்கிறதா? ஆனால் அங்கு ஒரு அகதி முகாமைக் காணக் கிடைப்பதில்லையே. சவூதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர்? இவ்வாறான கேள்விகளும் ஆச்சரியமும் எவருக்கும் எழவே செய்யும். அது நியாயமானதே.

அந்த வினாக்களுக்கும், ஆச்சரியத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இரண்டு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

அதாவது “சவூதி அரேபிய மண்ணில் அடைக்கலம் பெறும் எந்தவொரு முஸ்லிமும் பரதேசிகளைப் போன்று கூடாரங்களிலோ அல்லது அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களிலோ அல்லல்படக் கூடாது. அவர்களுக்கு உடனுக்குடன் வேலைவாய்ப்பு விஸா வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் சுயமரியாதையோடு தொழில் செய்து கௌரவமாக தலைநிமிந்து வாழ வேண்டும். அவர்களுக்கான சுகாதார வசதிகள், அவர்களது பிள்ளைகளுக்கான பாடசாலை வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளும் எதுவித குறைபாடுகளும் .இன்றி செய்து கொடுக்கப்பட வேண்டும்.“

“எமது மண்ணில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ள எவரும் அகதி என்ற கண் கொண்டு நோக்கப்படலாகாது. அவர்கள் எமது விருந்தினர். அவ்வாறே அவர்கள் நடாத்தப்பட வேண்டும்" என்று தம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மன்னர் கட்டளை பிறப்பித்திருக்கின்றார்.

அதேற்கேற்பவே சவூதி அரேபியாவில் அடைக்கலம் பெற்றுள்ள சகல அகதிகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ஏனைய நாடுகளைப் போன்று சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்த எவரும் முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்து பராமரிக்கப்படாதுள்ளனர்.

அதேநேரம் மன்னர் சல்மான் மற்றொன்றையும் கூறி வைக்கத் தவறவில்லை. அதாவது, “சவூதி அரேபிய மண்ணில் அடைக்கலம் பெற்றுள்ளவர்கள் தம் நாட்டு பிரச்சினைகள் தீர்ந்து அவர்கள் சுயவிருப்பின் பேரில் இருப்பிடங்களுக்கு திரும்பும் வரையும் அவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்து வாழ இடமளிக்கப்படும்“ என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய நவீன யுகத்தில் யுத்தங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்கின்ற மக்கள் அகதி முகாம்களிலும் கூடாரங்களிலும் வைத்து பராமரிக்கப்படுவதுதான் வழமை.

இந்த ஒழுங்கையே உலகில் பெரும்பாலான நாடுகள் கையாளுகின்றன. ஆனால் சவூதி அரேபியா அகதிகள் பராமரிப்பு விடயத்தில் இப்பராம்பரியத்திற்கு முற்றிலும் மாற்றமான ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகின்றது. அது இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் காட்டிக் கொடுத்த மனிதாபிமானம் மற்றும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. .

அதனால்தான் வெளிவிவகார அமைச்சர் ஆதில் பின் அஹ்மத் ஜுபைர், “நாம் எமது மண்ணில் இலட்சக்கணககான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கின்றோம். இதனை பிரபல்யம் கருதி நாம் செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள எமது உடன் பிறப்புக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இதனைச் செய்கின்றோம். அதனால் இதனை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை“ என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது எவ்வளவு பெரிய பதில். எவ்வளவு பெரிய ஏற்பாடு. அகதிகளைப் பராமரிப்பது என்பது இலகுவான காரியமா? ஆனால் அவர் இவ்விடயம் தொடர்பில் மிகச் சாதாரணமாக பதிலளித்திருக்கின்றார். இது சவதி அரேபியாவின் மனித நேயத்திற்கும் காருண்யப் பண்புக்கும் நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே சவூதி அரேபியா தம் மண்ணுக்கு இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிக்கும் ஒழுங்கு முழு உலகுக்குமே ஒரு முன்மாதிரி விளங்குகின்றது. இது மிகத் தெளிவான உண்மை.

அப்துல்லாஹ

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-