அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு புதிதாக அச்சிடப்பட்ட ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும் பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் இயல்பு நிலை ஏற்படும் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

வங்கிகள் மூடப்பட்டிருந்ததால்...

ரூ.500, ரூ.1,000-ஐ செல்லாது என அறிவித்து 1 மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர், குன்னம், வேப்பூர், அரும்பாவூர், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், பாடாலூர் உள்ளிட்ட இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் அது மூடப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள், தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் பூட்டப்பட்டிருந்ததால் செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். சில ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் கூட அதில் பணம் இல்லாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மக்கள் கூட்டம்

பெரம்பலூர் வெங்கடேசபுரம், பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள திருநகர் உள்ளிட்ட இடங்களில் சில ஏ.டி.எம். மையங்கள் நேற்று செயல்பட்டன. இதையறிந்த மக்கள் அந்த ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க குவிந்தனர். அந்த ஏ.டி.எம். மையங்களிலும் ரூ.2,000 நோட்டுகளாகவே எடுக்க முடிந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.2,000-க்கு சில்லறை பெற முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகமாக பணம் புழங்கும் இடங்களான பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கடைகள், தொழில் நிறுவனங்கள், பெரிய ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தான் மக்களால் சில்லறை பெற முடிகிறது. எனவே மாவட்டத்தில் புதிய ரூ.500 நோட்டுகளின் புழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-