அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் விரும்பாதவை ஏதேனும் இருந்தால் அதனை குடும்ப அட்டைதாரர்களே நிறுத்திக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதற்கென ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ள தனி செயலி (TNEPDS) மூலம் பொருள்களை நிறுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இப்போது 2 கோடியே 55 ஆயிரத்து 709 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன்மூலம், 7 கோடியே 51 லட்சத்து 23 ஆயிரத்து 928 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
ஆதார் எண் இணைப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளையும், ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்றோ அல்லது செயலி மூலமாகவோ ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
அதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 42 லட்சத்து ஆயிரத்து 593 பேரின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஒரு கோடியே 68 லட்சத்து 6 ஆயிரத்து 209 பேரின் செல்லிடப்பேசி எண்கள் பதிவாகியுள்ளன.
பொருள்களை நிறுத்தலாம்: ஆதார் எண், செல்லிடப்பேசி எண் இணைப்பின் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் வாங்கும் பொருள்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக அவர்களது செல்லிடப்பேசிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்ளவும், இதர பொருள்களை நிறுத்தி வைக்கவும் புதிய வசதி செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உணவுப்பொருள் வழங்கல் துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செயலியில் இரண்டு வகையான அம்சங்கள் இருக்கின்றன. 
குடும்ப அட்டைதாரர்கள் எந்தெந்த பொருள்களைப் பெற தகுதி படைத்தவர்கள் என்பதும், பொருள்கள் வாங்கிய பிறகு மீதமுள்ள பொருள்களின் அளவு எவ்வளவு என்பதை அறியும் வசதி ஒன்றாகும்.
மற்றொன்று, பொருள்கள் வாங்கியவுடன் அதன் அளவு, விலை ஆகியவற்றுடன் அதற்குச் செலுத்திய மொத்த தொகையையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டு வகையான அம்சங்களுடன் மேலும் ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதாவது, குடும்ப அட்டைக்குரிய பொருள்களில் ஏதேனும் தேவையில்லாமல் அல்லது வாங்குவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அதனை செயலி மூலமே நிறுத்தி வைக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.
இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் விரும்பாத, அவர்களுக்குத் தேவையில்லாத பொருள்களை பிற நபர்களோ, மற்ற குடும்ப அட்டைதாரர்களோ அதனை பெற்றுக் கொள்ளவோ முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
மின்னணு குடும்ப அட்டைகள்: ஆதார் எண் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 
அதேசமயம், மின்னணு குடும்ப அட்டைகள் நடைமுறைக்கு வர சில மாதங்களாகும் என்பதால் இப்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் காலம் சுமார் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-