அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், 2 நாட்கள் விடுமுறைக்குப்பின் வங்கிகள் திறக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு, பணபரிவர்த்தனைகளின் போது வழங்கப்பட்டு வருகின்றன.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கிறது. மக்களிடம் பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு வரும் வரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

2 நாட்கள் விடுமுறை

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி டிசம்பர் மாத 2-வது சனிக்கிழமையையொட்டியும், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என வங்கிகளுக்கு 2 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டிருந்தது.

அந்த 2 நாட்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திறக்கப்பட்டிருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களிலும் சிறிது நேரத்திலேயே பணம் தீர்ந்துவிட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அலைமோதிய மக்கள் கூட்டம்

மாவட்டத்தில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று வங்கிகள் திறக்கப்பட்டன. இதனால் பெரம்பலூர் வெங்கடேசபுரம், திருநகர் பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கி முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வங்கியின் அருகேயுள்ள ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்காக நேற்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பப்பட்டவுடன் மக்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று பணம் எடுத்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகள் செயல்பட்டபோதும் அதன் அருகே இருந்த பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டியபடியே இருந்தன.

இதனால் மக்கள் வங்கிகளில் வரிசையில் நின்று வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சில்லறை தட்டுப்பாட்டால் அவதி

திறக்கப்பட்டிருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களிலும் ரூ.2,000 நோட்டுகளாகவே வந்ததால் அதற்கு சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். எனவே புதிய ரூ.500 நோட்டுகளை மக்களின் புழக்கத்திற்கு அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர், குன்னம், புதுவேட்டக்குடி, அரும்பாவூர், பாடாலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில ஏ.டி.எம். மையங்களே திறக்கப்பட்டிருந்ததால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. அங்கும் பணம் சிறிது நேரத்தில் தீர்ந்து விட்டதால் வரிசையில் காத்து நின்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவர்கள் ஏ.டி.எம். மையங்களை தேடி பல இடங்களுக்கு அலைந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-