அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில், விபத்தில் கால் இழந்த மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு இழப்பீடு வழங்காததால், 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
மின்வாரிய என்ஜினீயர்
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 52). இவர், துறையூர் புத்தனாம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 3-1-2013 அன்று கதிரேசன் தனது நண்பர் ரவிச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் முசிறி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில், கதிரேசன் தனது ஒரு காலை இழந்தார். ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். விபத்தில் தனது காலை பறிகொடுத்த கதிரேசன், கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கோரி பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கதிரேசனுக்கு ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 112-ஐ அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கடந்த 27-2-2014 அன்று உத்தரவிட்டது.
2 பஸ்கள் ஜப்தி
இதையடுத்து, இழப்பீட்டு தொகையை குறைக்கக் கோரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 112-ஐ இழப்பீடாக வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 31-7-2015 அன்று நிறைவேற்று மனுவை கதிரேசன் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமா பானு, இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் பெரம்பலூர் கிளை பணிமனையில் நிற்கும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், வட்டியுடன் சேர்த்து ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 655-ஐ இழப்பீடாக கதிரேசனுக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன்பேரில், பெரம்பலூர் கிளை பணிமனையில் நின்று கொண்டிருந்த லாடபுரம்-சென்னை செல்லும் அரசு பஸ், பெரம்பலூர்-திருப்பூர் செல்லும் அரசு பஸ் என 2 பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். இழப்பீடு தொகை பெரிய அளவில் இருப்பதால் 2 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்கள் கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
மற்றொரு விபத்து வழக்கு
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (49). கடந்த 2008-ம் ஆண்டு இவர் வடகரை பாண்டகப்பாடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார், கும்பகோணம் கோட்ட அரசு போக்கு வரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 86-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதால் நிறைவேற்று மனுவை குமார் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி ஜெயந்தி, இழப்பீடு தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதால் அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 968-ஐ இழப்பீடாக குமாருக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்பேரில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெரம்பலூர்-அரியலூர் செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து பெரம்பலூர் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர். பெரம்பலூரில் ஒரே நாளில் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-