அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதிய கார் வாங்குவது கூட பலருக்கு சிரமமான விஷயமாக இருக்காது. ஆனால், இந்த பயன்டுத்தப்பட்ட காரை வாங்குவது என்பது அத்துனை சுலபமல்ல. பட்ஜெட் பிரச்னை, முதல்முறையாக காரை வாங்கி ஓட்டி பழகிய பின்னர் புதிய கார் வாங்கலாம் போன்ற காரணங்களால் பலருக்கும் தோதுவான விஷயமாக இருப்பது பயன்படுத்தப்பட்ட கார்கள்தான்.
ஆனால், யூஸ்டு கார் வாங்கும்போது, காரின் கண்டிஷன் முதல் அதன் ஆவணங்கள் வரை அனைத்திலும் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிவிட்டு பலரும் புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கக்கூடும். இருந்தாலும், இப்போது புதிய கார் வாங்குவோர் 3 முதல் 5 ஆண்டுகளில் காரை மாற்றுவதால், நல்ல கண்டிஷனில் உள்ள கார்களை வாங்கும் வாய்ப்பும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கு சில விஷயங்களை மனதில் கொண்டால், கசப்பான அனுபவங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
குறிப்பாக, குட்டி கார்களை வாங்குவோர் கடன் போடுவதை அறவே தவிர்க்கவும். ஏனெனில், வட்டி விகிதம் மிக அதிகம். கூட்டிக் கழித்து பார்த்தால், புதிய காரையே வாங்கிவிடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட செய்யும்.
3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் பழமையான காரை வாங்குவது நல்லது.
காரின் கண்டிஷனில் அதிக பிரச்னைகள் இருக்காது. அடுத்து சில ஆண்டுகளுக்கு அதே காரை விற்பனை செய்யாமல் பயன்படுத்தவும் முடியும். கடன் வாங்குவதற்கும் தோதுவாக இருக்கும்.
முதல் உரிமையாளரிடமிருந்து காரை வாங்குவது உத்தமம்.
இரண்டு அல்லது மூன்று உரிமையாளர்கள் கைமாறிய காரை தவிர்ப்பதும் நல்லது. மேலும், கார் சரியான பராமரிப்பில் இருந்துள்ளதா என்பதும் முக்கியம். சர்வீஸ் ஹிஸ்டரியை பார்த்தால் புரிந்துவிடும். சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட கார்களைவிட கவர்டு பார்க்கிங் எனப்படும் கட்டடங்களுக்குள் நிறுத்தப்படும் கார்களின் வெளிப்பகுதி சேதங்கள் இல்லாமல் இருக்கும்.
மிக குறைவான விலைக்கு வரும் கார்களையும் தவிருங்கள்.
நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்னை இருக்க வாய்ப்பு அதிகம். விபத்தில் சிக்கிய காராகவும், எஞ்சின் பிரச்னைகள் உள்ள காராகவும் இருக்கலாம். எனவே, நன்கு ஆய்வு செய்த பிறகே வாங்க முடிவு செய்யவும்.
பெட்ரோல் கார் என்றால் ஆண்டுக்கு 10,000 கிமீ தூரத்திற்கு மிகாமலும், டீசல் கார் என்றால் ஆண்டுக்கு 15,000 கிமீ தூரத்திற்கு மிகாமலும் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மேல் ஓடிய கார்கள் என்றால், நிச்சயம் தவிர்க்கலாம். அதேபோன்று, 30,000 கிமீ வரை ஓடிய கார்களை வாங்குவது நல்லது. அதிகபட்சமாக 40,000 கிமீ தூரத்திற்குள் ஓடிய கார்களை கண்டிஷனை பொறுத்து வாங்கலாம்.
கார் விபத்தில் சிக்கியிருந்தால், இன்ஸ்யூரன்ஸ் தொகை கோரப்பட்டிருப்பதற்கான தகவல் உள்ளதை வைத்து கண்டுபிடிக்கலாம். அல்லது, எஞ்சின் பகுதியில் பிரேமில் பசை ஒன்று தடவப்பட்டிருக்கும். அந்த பசையுடைய பாகம் மாற்றப்பட்டிருந்தாலும், விபத்தில் சிக்கி மாற்றியிருப்பதை கேட்டு தெரிந்து கொள்ளவும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும், பட்ஜெட்டிற்கும் தகுந்தவாறு காரை தேர்வு செய்வது அவசியம்.
4 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு சிறிய கார் போதுமானது. 5 பேருக்கும் மேல் உள்ள குடும்பத்தினருக்கு எம்பிவி கார் அல்லது எஸ்யூவி ரக காரை வாங்கலாம். அடிக்கடி நீண்ட தூர பயணிப்பவர்களுக்கு, உடமைகளை அதிகம் வைத்து எடுத்துச் செல்வதற்கான செடான் கார்களே சிறந்தது.
வாங்குவதற்கு நீங்கள் தேர்வு செய்திருக்கும் மாடல் எவ்வளவு ஆண்டு காலமாக மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கிறது. விரைவில் தயாரிப்பு நிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் கணக்கில் கொள்ளவும். ஏனெனில், தயாரிப்பு நிறுத்தப்பட்டால், காரின் உதிரிபாகங்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும் என்பதுடன், காரின் மறுவிற்பனை மதிப்பும் சரியும் வாய்ப்பு உள்ளது.
நீங்கள் தேர்வு செய்திருக்கும் காரின் ஓடிய தூரம், ஆண்டுகள் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ஆன்லைன் மூலமாக விலை நிலவரத்தை தெரிந்துகொள்ளவும். கார் பற்றி தெரிந்த நண்பர்களின் வாயிலாகவும் தெரிந்து கொள்வதும் அவசியம். டீலரிடம் பேரம் பேசும்போது இது உதவும். ஏனெனில், பெரும்பாலும் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதால், ஏமாற்றப்படும் வாய்ப்பு அதிகம்.
கார் தயாரிப்பு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பழைய கார் விற்பனை மையங்கள் மூலமாக வாங்கும்போது பல அனுகூலங்கள் இருக்கிறது. காரை முழுமையாக பரிசோதித்து, அதில் உள்ள பழுதுகளை சரிசெய்து விற்பனை செய்கின்றனர். ஆவணங்களில் மோசடிகள் நடக்கும் வாய்ப்பு குறைவு. சில டீலர்கள் வாரண்டியும், விபத்தில் சிக்கிய கார் இல்லை என்பதற்கான உறுதியையும் தருகின்றனர்.
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன. காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள், டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொண்டு, அதில் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்யுங்கள். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் மாதத் தவணை போட வேண்டாம்.
விற்பனையாளரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன்,அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால் கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம்.
தவிர, கார் எத்தனை கி.மீ.,தூரம் ஓடியிருக்கிறது, பாகங்களின் தேய்மானம், விபத்துக்களில் சிக்கிய காரா என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக அறிந்த பின்னரே வாங்க வேண்டும். முடிந்தால் உங்கள் குடும்பத்தினரை அதில் உட்கார வைத்து வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள்.
காரை தேர்வு செய்தபின், அதன் பதிவு புத்தகம் (ஆர்.சி.,புக் அல்லது ஸ்மார்ட் கார்டு), சாலை வரி செலுத்தியதற்கான ரசீது, இன்ஷ்யூரன்ஸ், ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது.
கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால், கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.,புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். கடனில் வாங்கி கட்டி முடிக்கப்பட்டதற்கான என்ஓசி சான்று சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பெறப்பட்டிருப்பதா என்பதையும் உறுதி செய்யவும்.
ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி., புத்தகத்தில் ஹைப்போத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், விற்பனையாளரிடம் என்ஓசி., சான்றை வைத்து ஆர்.டி.ஒ., அலுவலகத்திலிருந்து ஹைப்போத்திகேஷனை நீக்கி தர சொல்லுங்கள்.
ஆர்.சி.,புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும், காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி - சரவண ராஜன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-