அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தாத்தா பாட்டி காலத்தில் விவசாயத்துக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி உணவு பொருட்களை உற்பத்தி செய்தனர். 

அணில் கடித்த கனியும், புழு குடைந்த காய்களும் தான் உடலுக்கு சத்து என்றனர், நம் முன்னோர். தொழில்நுட்ப வளர்ச்சியால், நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிக்கின்றனர்.
இதனால், பூச்சிகளும் சாகிறது, கொஞ்சம் கொஞ்சமாக நம்


ஆயுட்காலமும் குறைகிறது. இது ஒருபுறம் இருக்க, உணவுகளில் கலப்படம் செய்வதும், நமது ஆரோக்கியத்துக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது. 

விற்பனையை அதிகரிக்கவும், லாபத்தை கூட்டவும், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்கின்றனர். நுகர்வோர் காசு கொடுத்து, நோயை வாங்கும் நிலை உள்ளது. 

கண்ணால் கண்டுபிடிக்காத அளவுக்கு கலப்படங்கள் கலக்கப்படுகின்றன. இதை எப்படி கண்டுபிடிப்பது? இதோ சில பொருட்களும், அதில் கலக்கப்படும் பொருட்களும்…
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு, மணம் சேர்த்து கலப்படம் செய்கின்றனர். 

சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால், பால் போன்ற கரைசல் கிடைக்கும். கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும். 

சர்க்கரையில், சுண்ணாம்புத் தூள் சேர்க்கின்றனர். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும். 

ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள். இதை கையால் தடவிப்பார்த்தால், பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.
மஞ்சள் தூளில், பருப்பு வகைகளில் மெட்டானில் என்ற மஞ்சள் ரசாயனம் கலக்கின்றனர். 

அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில், இந்த மஞ்சளை சிறிது கலந்தால், மஞ்சள் மெஜந்தா நிறமாகி விடும். மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கின்றனர். 

தண்ணீரில் கரைத்தால், மரத்தூள் மிதக்கும், கலர் பொடி தண்ணீருக்கு நிறம் கொடுக்கும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 மி.லி., அசிட்டோன் சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் கலப்படத்தை உறுதி செய்யலாம்.

நெய் அல்லது வெண்ணெயில் வனஸ்பதி கலக்கின்றனர். ஒரு சோதனைக் குழாயில், உருகிய நெய் அல்லது வெண்ணெயும், அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும், ஒரு சிட்டிகை சர்க்கரையையும் சேர்த்து ஒரு நிமிடம் குலுக்கி, ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு தங்கினால் அது கலப்படமான நெய் அல்லது வெண்ணெய். பாலில் தண்ணீர் கலக்கின்றனர். 

லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண்டறியலாம். அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதி. 

மேலும், ஒரு பரப்பில், ஒரு சொட்டு பால் விட்டால், சுத்தமான பாலாக இருந்தால் லேசாக நகரும் அல்லது கலப்படமான பாலாக இருந்தால் வேகமாக ஓடிவிடும். பருப்பு வகைகளில் கேசரி பருப்பு கலக்கின்றனர். 

பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைத்தால், இளஞ்சிவப்பு நிறம் தோன்றும்.

கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்: குடலில் அரிப்பு உண்டாகும். உணவு வண்ணங்கள், நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப்படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.

 உணவில் அனுமதிக்கப்படாத வண்ணங்களான மெடானில் எல்லோ, ரோடமின் பி.ஆரமின், ஆரஞ்சு 2, மாலசைட் கிரீன் ஆகியவை கல்லீரல் , சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் ஆகியவற்றை தாக்கி குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-