அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பூலாம்பாடி பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் இளம்பெண் பிணம்

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பகுதியிலுள்ள பூலாம்பாடி-அரும்பாவூர் ரோட்டில் விவசாய கிணறு உள்ளது. சுமார் 40 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இந்த கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து அரும்பாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கட்டிலில் கயிறு கட்டி அதன்மூலம் கிணற்றுக்குள் கிடந்த இளம்பெண்ணின் பிணத்தை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

திருமணத்திற்கு மறுப்பு

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிணற்றுக்குள் பிணமாக கிடந்த அந்த இளம்பெண், பூலாம்பாடி தேவராஜ் நகரை சேர்ந்த சின்னு மகள் வளர்மதி (வயது 23) என்பது தெரிய வந்தது. பி.ஏ. பட்டதாரியான வளர்மதி கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி மாலை கோவையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வளர்மதி வந்தார். அப்போது வளர்மதிக்கு மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் என வளர்மதி மறுப்பு தெரிவித்து வந்தார். அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை திடீரென வீட்டை விட்டு வெளியே சென்ற வளர்மதி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதியின் பெற்றோர் அவரை தேடி கோவைக்கு சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்தநிலையில் பூலாம்பாடி-அரும்பாவூர் ரோட்டிலுள்ள கிணற்றில் இளம்பெண் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து சந்தேகத்தின் பேரில் வளர்மதியின் தங்கை அஞ்சலை அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தது காணாமல் போன வளர்மதி என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. மேற்கண்ட தகவல் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல் சம்பவ இடத்திற்கு வந்து வளர்மதியின் உடலை கைப்பற்றி விசாரித்த போது தெரிய வந்தது.

பரபரப்பு

இதற்கிடையே அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார் வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குதித்து வளர்மதி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-