அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஷரியத் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத்துகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய இந்த பொதுக் கூட்டத்துக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை வகித்தார். 



கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளை கேள்விக்குறியாக்கி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிசெய்யும் மத்திய அரசை கண்டிப்பதோடு, வழிகாட்டும் நெறிமுறையில் உள்ள சட்டப்பிரிவு 44-யை நீக்க வேண்டும்.

தமிழக பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்களில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற முயற்சி செய்து பதற்றத்தை ஏற்படுத்தும் காவல் துறையின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ரூ. 500 மற்றும் ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

குலக்கல்வி கொள்கையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பது, தமிழக சிறைகளில் நீண்ட காலமாக குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளையும், அனைத்து ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் தமிழக அரசு கருணையின் அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவரும், முன்னாள் எம்.பியுமான கே.எம். காதர்மொய்தீன், தமிழ் மாநில ஜமா அமாஅத்துல் உலமா சபை பொது செயலாளர் முஹம்மது ரிழா, முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், தமுமுக மூத்த தலைவருமான ஹைதர் அலி, எஸ்டிபிஐ கட்சி மாநிலத்தலைவர் தெஹ்லான் பாக்கவி உட்பட இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் பலர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, மாவட்ட தலைவர் ஜபர் சாதிக் நூரி தொடக்கவுரையாற்றினார். ஜமா அமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் அய்யூப்கான் வரவேற்றார்.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-