அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 துபாய் மற்றும் வளைகுடா வாழ்க்கை  என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு கற்பனை இருக்கும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பரந்து விரிந்த அழகான வீதிகள், பார்க்குமிடமெல்லாம் அழகழகான காட்சிகள், ஏராளமான பொழுது போக்கு இடங்கள், ஏசி அறையில் கணணி முன் வேலை, கைநிறைய சம்பளம், இதுதான் மத்தியகிழக்கிற்கு வந்து பார்க்காத எண்ணற்ற மக்களின் எண்ணங்கள்,


ஒரு தடவையாவது இங்கு வந்து பார்த்தால்தான் வெளிநாட்டு தொழிலாளர்கள் படும் வேதனையும் கஷ்டமும், சிந்தும் இரத்தமும், கண்ணீரும், ஏன் சிலவேளைகளில் விபத்துக்களினால் இழக்கும் உயிர்களை கூட கண்டுகொள்ள முடியும். தாய் நாட்டிலிருந்து ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு கேட்கும் பொருள்களுக்காக எத்தனையோ விதமான கஷ்டங்களை ஒரு தொழிலாளி இங்கு அனுபவிக்கிறான் அந்த கஷ்டங்கள் எதுவும் தாய் நாட்டில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை அதை சொல்லிக்கொள்வதற்கும் அந்த தொழிலாளி விரும்புவதில்லை.
அவர்கள் கேட்ட பொருட்கள் அவர்களின் கையில் தவழ்வதை பார்த்து அடையும் சந்தோசத்தின் வாயிலாக திருப்திப்பட்டுக்கொள்கிறான் அவன், மத்திய கிழக்கில் குடும்பத்துடன் சுகபோகமாக வாழும் வெளிநாட்டினர் நூற்றில் ஒரு சிறு விகிதத்தினரே இருக்கின்றனர், மிகுதியாக உள்ள அனைவரும் எல்லாவற்றையும் இழந்து ஏதோ குறையுடன் யாருக்காகவோ ஒருத்தருக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு தொழிலாளி இங்கு வீசும் கடுமையான மணற்புயலுக்கு ஒதுங்கி குப்பை தொட்டியின் அடியில் குந்தியிருக்கும் காட்சியே இது,
இந்த காட்சியை காணும் ஒவ்வொரு தாயின் உள்ளமும் பதை பதைக்கும், ஒவ்வொரு மனைவியின் உள்ளமும் உருகும், தனது கணவனுக்கு அல்லது மகனுக்கு இந்த நிலை ஏற்படுவதையும் அதை அவர்கள் கண்களினால் பார்ப்பதையும் யாரும் விரும்பமாட்டார்கள், அவர்களின் கண்முன்னால் இப்படியான ஒரு நிலை ஏற்பட அவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள், ஆனால் மத்தியகிழக்கில் அவர்கள் அர்ப்பணிக்கும் வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
மத்தியகிழக்கில் வாழ்கின்றவர்கள் எல்லோருமே பன்னீரில் குளித்து சந்தனத்தில் மணக்கிறார்கள் என்று எண்ணாதீர்கள் வியர்வையில் குளித்து அதன் வாசத்தில் திளைக்கிறார்கள் உங்களின் அதீத ஆசைகளையும், கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள்.

By - ரசானா மனாப் -

மடவள

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-