அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை: வெளிநாட்டிற்கு சென்று அதிக பணம் சம்பாதிக்க ஆசைபட்டவர்கள் குவைத் சிறையில் சிக்கி தவித்த பரிதாபம் நேர்ந்துள்ளது. பின்னர், இந்திய தூதரகத்தின் முயற்சியால் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (31), கனரக வாகன ஓட்டுனர். வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட் ஒருவரை கடந்த ஆண்டு ஜெய்சங்கர் அணுகினார். அவரிடம் ஏஜென்ட், ‘‘குவைத்தில் டிரைவர் வேலை உள்ளது, ஆரம்ப சம்பளம் ரூ.27 ஆயிரம், தங்குமிடம், உணவு இலவசம்’’ என கூறியுள்ளார். இதை நம்பி, வட்டிக்கு கடன் வாங்கி ரூ.1.20 லட்சத்தை அந்த ஏஜென்டிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 2015ல் பிப். 9ம் தேதி, அந்த ஏஜென்ட், ஜெய்சங்கரை மும்பைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதேபோல, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இப்ராகிம் (47) என்பவருக்கு, ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மற்றொரு ஏஜென்ட் அங்கு அழைத்துள்ளார். இருவரையும் குவைத்துக்கு அழைத்து சென்று ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்து விட்டு ஏஜென்ட்கள் இந்தியா திரும்பி விட்டனர்.
இந்நிலையில், அவர்களிடம் பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்ைல. பாதிதான் வழங்கப்பட்டுள்ளது. ஏஜென்ட்கள் பொய் சொல்லியுள்ளார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. இருப்பினும், இருவரும் வேலை செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு, அந்த பாதி சம்பளம் கூட கொடுக்கவில்லை. ஏப்ரல் முதல் வேலை செய்யாமல் சம்பள பாக்கியை கேட்டு ஜெய்சங்கரும், இப்ராகிமும் போராடினர். ஆனாலும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதை ெதாடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்ய வைத்தனர். அதன் பின்னர் அவர்கள் மற்ற இந்தியர் அறையில் இருந்து கொண்டு குவைத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதனால், ‘ஊருக்காவது அனுப்பி விடுங்கள், பாஸ்போர்ட் கொடுங்கள்’ என கேட்டபோதும் நிர்வாகம் மறுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும், மத்திய, மாநில அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிடும்படி அறிவுறுத்தப்பட்டது. அப்போதும் நடவடிக்கை ஏதுமில்லை. ஆனால், கர்நாடக மாநில அரசு, இப்ராகிம், ஜெய்சங்கர் ஆகியோரை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

இதையடுத்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. அதற்குள் அவர்களது விசா காலாவதியானது. அதனால் அவர்களை குவைத் அரசு, 15 நாட்கள் சிறையில் அடைத்தது. அங்கு சில நாட்கள் சாப்பாடு, குடிதண்ணீர் கூட இல்லாமல் இருவரும் வேதனையை அனுபவித்தனர்.
அதன் பின்பு 15 நாட்கள் கழித்து இந்திய தூதரகத்தின் முயற்சியால் இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் இந்திய தூதரகம் மூலம் விமான டிக்கெட் எடுத்து கொடுத்து நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் இருவரும் சென்னை வந்தனர். பின்னர் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுதியில்லை

அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கடன் வாங்கி பணம் கொடுத்து வேலைக்கு சென்ற ஓராண்டுக்குள் கடந்த ஜனவரி மாதம் ஜெய்சங்கரின் தந்தை மாணிக்கம் காலமானார். இதையடுத்து, சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டு கதறியுள்ளார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாஸ்போர்ட்டும் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால், தந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைக்கு ஜெய்சங்கர் தள்ளப்பட்டுள்ளார்-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-