அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மதுரை: கண்ணுக்குக் குளிர்ச்சியாய் விரிந்து பரவியுள்ள சிறுமலையின் சரிவில், வழிந்தோடி வரும் தண்ணீர் அருவியாகப் பெருகி, இதமான சூழலைத் தருகின்ற ஓரிடம்தான் இந்தக் குட்லாடம்பட்டி தடாகை நாச்சியம்மன் அருவி.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி என்ற மலையோர கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடாகை நாச்சியம்மன் அருவி.

அக்டோபரிலிருந்து டிசம்பர் மாதம் வரை இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும். வழிந்தோடி வரும் தண்ணீர், ஆற அமர குளித்துச் செல்வதற்கு ஏற்றதாக இருப்பதுதான் குட்லாடம்பட்டியின் சிறப்பு.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் இந்த அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறை பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதிகம் அறியப்படாத... மதுரை மக்களே அவ்வளவாக அறிந்திராத காசுக்கேற்ற குளு குளு வாசஸ்தலம் குட்லாடம்பட்டி.

அடிவாரத்திலிருந்து அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் பாதை சிதிலமடைந்துவிட்டது. அண்மையில் வனத்துறை ரூ.51 லட்சம் செலவில் செம்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளது.

பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலாவை விரும்புகின்ற மக்களுக்கு ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக அமைந்ததுதான் குட்லாடம்பட்டி அருவி.

தற்போது குற்றாலம் பக்கமெல்லாம் செல்ல முடியாது. காரணம் அபாயகட்டத்தைத் தாண்டி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

அதுமட்டுமன்றி, குற்றாலம் செல்வதென்றால் ஆகக்கூடிய செலவில் பாதிக்கும் குறைவாகவே குட்லாடம்பட்டிக்கு ஆகும். ஆகையால் ஒரு நாள் நேரம் ஒதுக்கி, உணவு வகைகளோடு குடும்பம் குட்டிகளோடு சென்று உங்களை புத்தெழுச்சி செய்து கொள்வதற்கு ஏற்ற அருவி.

வாகனத்தில் சென்றால் அதனை நிறுத்துவதற்குக் கட்டணம் ரூ.15. நுழைவுக் கட்டணம் ரூ.10 இதைத் தவிர வேறு எந்த செலவும் இங்கில்லை.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சற்றேறக்குறைய 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரப்பேருந்திலேயே பயணம் செய்யலாம். இங்கிருந்தே குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி உண்டு. ஆனால் அது நேரத்திற்கு மட்டும்தான்.

ஆனால் வாடிப்பட்டி சென்றுவிட்டால் அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் அடிக்கடி பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.

ரம்யமான வனப்பகுதி... பாதுகாப்பான குளியல்... தொந்தரவில்லாத மகிழ்ச்சி... செலவில்லாத பயணம்...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-