அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் அருகே காரும், சரக்கு வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

கார்-சரக்கு வேன் மோதல்

சென்னை நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). இவர் தனது மனைவி பாரதி, மகள் சுவாதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சரவணன் குடும்பத்தினர் உள்பட 10 பேரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெறவுள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த காரை மோகன் ராஜின் உறவினர் பிரின்ஸ் (22) ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் புறவழிச்சாலையில் அந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன் அய்யலூர் ரோட்டிற்கு வருவதற்காக புறவழிச்சாலையை கடந்து செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மோகன்ராஜ் உள்ளிட்டோர் வந்த காரும், சரக்கு வேனும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் குட்டிக்கரணம் அடித்து சாலையில் உருண்டது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சரக்கு வேன் டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில், கார் டிரைவர் பிரின்ஸ், மோகன்ராஜ், அவரது மகள் சுவாதி (11), சரவணன் மனைவி ஜெயதேவி (35) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். காரிலிருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

மேலும், காருடன் மோதியதில் சரக்கு வேனில் இருந்த தண்ணீர் கேன்கள் தூக்கி வீசப்பட்டு விழுந்ததில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த பெரம்பலூர் காரை கிராமத்தை சேர்ந்த அழகன் (65), வரகுபாடி கிராமத்தை சேர்ந்த ராஜாமணி (55) உள்பட 3 பேர் படுகாய மடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் படுகாயமடைந்த மோகன்ராஜ் உள்பட 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் உள்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, பொக்ளின் எந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான கார் மற்றும் சரக்கு வேனை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்படுத்தினர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-