அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு முன்னோட்டமாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் முக்கிய கடைவீதிகளிலுள்ள கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் பொருட்கள் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பொதுமக்களும் சில்லறைக்காக பல இடங்களில் அலைந்தனர்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக...


இந்திய நாட்டில் கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழித்து கட்டுவதற்காகவும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என டெலிவிஷன் மூலமாக பிரதமர் மோடி, பொதுமக்களுக்கு அறிவித்தார். இருப்பினும் அரசு ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பொதுத்துறை பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் இந்த நோட்டுகள் 11–ந் தேதி நள்ளிரவு வரை ஏற்று கொள்ளப்படும் எனவும், அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த நோட்டுகளை வங்கியில் அடையாள அட்டைகளை காண்பித்து மாற்றி கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வங்கிகள் திறக்கப்படவில்லை


மத்திய அரசு அறிவித்ததன் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகள், அந்த வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் ஆகியவை நேற்று திறக்கப்படவில்லை. இதையறியாமல் வங்கிக்கு பணம் எடுப்பதற்காகவும், பணபரிவர்த்தனைகளுக்காகவும் வந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பெரம்பலூர் கடைவீதி, சூப்பர் பஜார், போஸ்ட் ஆபிஸ் தெரு, காமராஜர் வளைவு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளிலுள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. மாறாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு சில்லறை கேட்டு பொதுமக்கள் அந்த கடைகளுக்கு சென்றனர். பெரும்பாலன கடைகள் ரூ.100 நோட்டுகளை கொண்டு வருமாறு மக்களை திருப்பி அனுப்பினர். ஆனால் ஒரு சில கடைகள் சில்லறை தர மறுத்து ரூ.500, ரூ.1,000–க்கு மொத்தமாக பொருட்கள் வாங்குமாறு பொதுமக்களை வற்புறுத்தினர். இதனால் பொதுமக்கள் சில்லறைக்காக ரூ.500, ரூ.1,000–ஐ வைத்து கொண்டு பல இடங்களுக்கு அலைந்தனர். வெளியூரிலிருந்து பெரம்பலூருக்கு வந்த சிலர் சில்லறை கிடைக்காமல் சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் தவித்தனர்.

சில்லறைக்காக மக்கள் அலைந்தனர்


எனினும் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கொண்டு வந்த ரூ.500, ரூ.1,000–ம் ஏற்று கொள்ளப்பட்டது. ஆனாலும் அந்த இடங்களில் சில்லறை வழங்கப்படவில்லை. அந்த வகையில் ரூ.500, ரூ.1,000 வைத்திருந்தவர்கள் பெரம்பலூர் வெங்கடேசபுரம், புதிய பஸ் நிலையம் அருகே, காமராஜர் வளைவு உள்ளிட்ட இடங்களிலுள்ள பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் குறைந்தது ரூ.200–க்கு தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு விட்டு சில்லறை வாங்கி சென்றனர். ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்குகளிலும் சில்லறை தட்டுப்பாடு நிலவியது. இதனால் ஒரு சில பெட்ரோல் பங்குகளில் ரவுண்டாக ரூ.500, ரூ.1,000–க்கு பெட்ரோல் போட்டால் அந்த நோட்டுகளை வாங்குகிறோம் என அங்கிருந்த ஊழியர்கள் கூறினர்.

மூதாட்டி தவிப்பு


கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய பிரதமர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம் வருமாறு:–

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை பகுதியை சேர்ந்த காவேரி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாத தனது பேத்தியை அழைத்து கொண்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சிகிச்சை கட்டணமாக ரூ.500–ஐ வாங்க மறுத்துவிட்டு சில்லறை கொண்டு வருமாறு கூறினர்.

இதனால் வேறு வழியின்றி அங்கிருந்த ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பு காவேரி தனது மகள் மற்றும் பேத்தியுடன் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். ரூ.500, ரூ.1,000–ம் நோட்டுகள் செல்லாமல் போய்விட்ட தகவல் எனக்கு தற்போது தான் தெரியும். இது தெரிந்திருந்தால் எங்கள் ஊரிலேயே சில்லறை மாற்றி கொண்டு வந்திருப்பேன் என காவேரி கூறினார்.

தீவிரவாதம்–கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு...


பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பொருளியல் ஆசிரியை விஜயராணி கூறியதாவது:–

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழக்கத்தினை தடுப்பதற்காகவும் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளை நான் பெரிதும் வரவேற்கிறேன். ரூ.500, ரூ.1,000 செல்லாது என திடீரென அறிவித்ததால் தான் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் வரி செலுத்தி அரசிடம் ஒப்படைக்க முன்வருவர். மாறாக முன்பே அறிவித்திருந்தால் கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு அது சாதமாக அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. வேலையில்லாத இளைஞர்கள், வறுமையில் வாடுவோர் உள்ளிட்டோரை தீவிரவாதிகள் கள்ள நோட்டுகளை கொடுத்து தேசதுரோக செயல்களில் ஈடுபட செய்கின்றனர். பிரதமரின் இந்த திடீர் நடவடிக்கை கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

பழக்கடை பெண் வியாபாரி


பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழக்கடை வைத்துள்ள தேவி (வயது 31) கூறியதாவது:–

நிறைய பேர் ரூ.500, ரூ.1,000–ஐ கொடுத்து என்னிடம் பழங்களை வாங்கி கொண்டு சில்லறை கேட்கின்றனர். ஆனால் அவை செல்லாது என அறிவிக்கப்பட்டு விட்டதால் அந்த நோட்டுகளை பெற்று கொண்டு வியாபாரம் செய்ய மனம் வரவில்லை. லஞ்சம், ஊழல், கருப்பு பணம், கள்ள நோட்டு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த இதனை தவிர வேறு வழியில்லை. பிரதமர் மோடியின் திடீர் நடவடிக்கை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை தான் ஏற்படுத்தியிருக்கிறது. என்னை போன்ற சிறு, சிறு வியாபாரிகள் வளர்ச்சி அடைய இந்த மாற்றம் கண்டிப்பாக தேவை என்று கூறினார்.

ஆட்டோ டிரைவர்


பெரம்பலூர் துறையூர் ரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்ரமணியன் கூறுகையில், சமீபத்தில் பிச்சைக்காரன் என்ற ஒரு படத்தை பார்த்த போது கருப்பு பணத்தை ஒழிப்பது குறித்த காட்சிகள் இடம் பெற்றன. அப்போது இதுபோல் நடந்தால் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். ஆனால் இதனை நிஜமாகவே பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. ரூ.500, ரூ.2,000 புதிய நோட்டுகளின் வரவால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் வெறும் காகிதமாக மாறிவிடுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-