அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி 2½ வயது சிறுவன் தாயின் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

பள்ளி வேனில் இருந்து...

பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை அடுத்த களரம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ. கொத்தனார். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). இவர்களுடைய மகள் ஹாசினி (6) அம்மாபாளையம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் பிரித்திவ் (2½) சிறுவன் என்பதால் வீட்டிலேயே இருந்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக அந்த பள்ளி வேனில் ஹாசினி ஏறினார். பின்னர் சிறிது நேரத்தில் களரம்பட்டி வந்ததும் அங்கு வழக்கம் போல் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைகள் பள்ளி வேனிலிருந்து இறங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளி வேன் இருக்கும் இடத்திற்கு சரண்யா நடந்து வந்தார். பின்னர் அந்த வேனிலிருந்து ஹாசினியை இறக்கி விட்டு வீட்டிற்கு கூட்டி செல்ல முற்பட்டார்.

சிறுவன் பலி

இதற்கிடையே சரண்யாவின் பின்னாலேயே ஓடி வந்திருந்த சிறுவன் பிரித்திவ் அந்த பள்ளி வேனின் முன்புற பகுதியில் நின்று கொண்டிருந்தான். இந்த நிலையில் வேன் டிரைவர் திடீரென வண்டியை எடுத்ததார். அப்போது பள்ளி வேனின் முன்புற சக்கரம் பிரித்திவின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பிரித்திவ் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். இதைக்கண்ட சரண்யா அதிர்ச்சியில் உறைந்து போய் தனது மகனின் உடலை பார்த்து கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பிரித்திவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பள்ளி வேனின் டிரைவர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணுவை (40) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-