அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


 சென்னை: திருவண்ணாமலை அருகே தென்கரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேது. கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (50). இவர்களுக்கு சக்திவேல், முருகன் ஆகிய மகன்கள், சத்யா என்ற மகள் உள்ளனர். சக்திவேலுக்கும், சத்யாவுக்கும் திருமணமாகி, தனித்தனியாக வசிக்கின்றனர். சேதுவுக்கு சரியான வேலை இல்லை. இதனால், குடும்பம் வறுமையில் வாடியது.மல்லிகா, வீட்டு வேலைக்காக பலரிடம் கேட்டு வந்தார். அந்த நேரத்தில், ஏஜென்ட் ஒருவர், வடமாநில நிறுவனம் மூலம், மல்லிகாவை குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு செல்லும்படியும், அங்கு சென்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து கொண்டு வரலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளார். அதற்கு 1.5 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தார். இதனால் சேது, பலரிடம் ₹1.5 லட்சம் கடன் வாங்கி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், மல்லிகாவை குவைத்துக்கு அனுப்பி வைத்தார்.குவைத்துக்கு மல்லிகா சென்றதும், அங்கிருந்த வடமாநில நிறுவனத்தினர், தங்களது கம்பெனிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், ஒரு வீட்டில் வேலைக்கு சேர்த்தனர். அங்கு ஒரு ஆண்டு வேலை செய்தார். இதையடுத்து மீண்டும் அந்த நிறுவனத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு, மற்றொரு வீட்டில் ஒரு ஆண்டு வேலைக்கு சென்ற மல்லிகாவுக்கு, அங்கு ஒப்பந்தம் முடிந்தது.

இதையடுத்து சொந்த ஊர் செல்ல அவர் முடிவு செய்தார். ஆனால், அந்த நிறுவனத்தினர், மல்லிகாவின் பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும், சில மாதங்கள் அங்கு வேலை செய்ய வேண்டும் என கூறி, மற்றொரு இடத்தில் வேலைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு 20 மணி நேரம் வேலை வாங்கி, உணவு சரியாக கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதற்கிடையில் கடந்த 2015ம் ஆண்டு, மல்லிகாவின் மூத்த மகன் சக்திவேல் இறந்துவிட்டார். இதுபற்றிய தகவல் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர், தனது மகனின் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என அவர்களிடம் மன்றாடி கேட்டுள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தினர், மல்லிகாவின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் அடித்து உதைத்து சொந்த ஊர் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.மேலும், உனது விசா காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் நீ, கூடுதலாக 2 ஆண்டுகள் தங்கிவிட்டாய். இதனால், சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியதாக கூறி, போலீசில் பிடித்து கொடுப்பதாக மிரட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன அவர், அங்கேயே சித்ரவதைகளை அனுபவித்து, வேலை செய்துள்ளார். தாய், குவைத் நாட்டில் சித்ரவதை செய்யப்படுவது, மல்லிகாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தில், சேது மற்றும் குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் ஆகியோரிடம் புகார் செய்தனர். மேலும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் புகார் செய்யப்பட்டது.அதன்படி, குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், மல்லிகாவை அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் 2 கால்களும் செயலிழந்து இருந்தது. இதையடுத்து அவரை, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் பற்றி, குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கு தெரியவந்தது.இதை தொடர்ந்து குவைத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், மல்லிகாவை வேலைக்கு அழைத்து சென்ற வடமாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு சென்றனர். அங்கு, மல்லிகாவை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என கூறி, அவரது பாஸ்போர்ட்டை கேட்டனர். அதற்கு, மல்லிகாவால் எங்களுக்கு 1.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை திருப்பி கொடுத்தால், மட்டுமே பாஸ்போர்ட் தரமுடியும் என கூறிவிட்டனர்.

இதனால், திருவண்ணாமலையில் உள்ள மல்லிகாவின் கணவர் சேது, மகன் முருகன், மகள் சத்யா, அவரது கணவர் வசந்தகுமார் ஆகியோர் பலரிடம் கடன் வாங்கி 30 ஆயிரம் அனுப்பினர். 4 ஆண்டுகள் வேலை செய்த பணத்தில், மல்லிகா நகைகள் வாங்கி வைத்திருந்தார். அந்த நகைகளை விற்று, 40 ஆயிரம் தயார் செய்தனர். ஆனாலும், பணம் போதவில்லை. இதையடுத்து தனியார் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்டி, அந்த நிறுவனத்துக்கு பணத்தை கொடுத்தனர். மேலும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் பணம் கட்ட வேண்டி இருந்தது. அந்த பணத்தையும், தொண்டு நிறுவனத்தினர் கொடுத்தனர். பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள், தங்களது சொந்த பணத்தில், மல்லிகாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து, சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையொடடி நேற்று காலை மல்லிகா விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்க, குடும்பத்தினர் அனைவரும் விமான நிலையத்தில் கண்ணீருடன் காத்திருந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் அவர், மெதுவாக வருவதை பார்த்ததும் கதறி அழுதனர்.

* என்னைப்போலஏமாற வேண்டாம்
மல்லிகா நிருபர்களிடம் கூறுகையில், ‘வெளிநாட்டு வேலைக்கு செல்ல பலர் ஆசை வார்த்தை கூறுவார்கள். அதை கேட்டு யாரும் என்னைபோல் ஏமாற வேண்டாம். நான் கட்டிய பணமும் போனது, சம்பாதித்த பணமும் போனது. தற்போது அடி, உதை வாங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளேன். என்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது’ என கண்ணீருடன் கூறிவிட்டு சென்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-