அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பிகாரில் காதலைப் பிரிந்து விடுவார்கள் என கருதி வீட்டை விட்டு ஓடிப் போன இளம் முஸ்லிம் காதலர்களுக்கு சிவன் கோயிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பிகாரில் சபாவுல் மாவட்டம் பீம்நகரைச் சேர்ந்தவர் முகமது சோகன் ( வயது 25). அதே கிராமத்தைச் சேர்ந்த நிரோஷா என்ற பெண்ணை இவர் காதலித்தார். நிரோஷாவுக்கும் முகமது சோகன் மீது விருப்பம். கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்த இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து தங்களை பிரித்து விடுவார்கள் என்று கருதிய காதலர்கள் தசரா அன்று வீட்டுக்கு பயந்து டெல்லிக்கு ஓடி விட்டனர். கையில் காசு இல்லாமல் டெல்லியில் தாக்குபிடிக்க முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சொந்தகிராமத்துக்கு மீண்டும் திரும்பினர்.

ஊர் பஞ்சாயத்துக் கூடியது. ஆளாளுக்கு ஒரு கருத்து சொன்னார்கள். ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் சுதிர் குமார் சற்று வித்தியாசமாக இருந்தார். காதலர்கள் இருவரையும் முறைப்படி திருமணம் செய்து வைத்து சேர்த்து வைப்பது என முடிவெடுத்தார். காதலர்களின் பெற்றோர்களும் ஒப்புக் கொண்டனர். அதே வேளையில் கிராமத்தின் மதநல்லிணக்கத்தை நிரூபிக்கும் வகையில், கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் வைத்து காதலர்களுக்கு முறைப்படி திருமணம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. சுதிர் குமாரின் முடிவுக்கு இஸ்லாமிய பெரியவர்களும் மனப்பூர்வமாக சம்மதித்தனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இஸ்லாமிய மதகுரு மவுலவி முகமது ஜாஃபர் திருமண உடன்படிக்கை வாசிக்க முகமது சோகனும் நிரோஷாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இந்து, இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தடபுடல் விருந்தும் வழங்கப்பட்டது.

திருமணம் குறித்து பஞ்சாயத்துத் தலைவர் சுதிர் குமார், ''இனம், மதத்தை வைத்து மக்களை துண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவே சிவன் கோயிலில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். அன்பு மட்டுமே எங்கும் வெற்றி பெறும்'' என்கிறார்.

Advertisement
திருமணத்தை நடத்திய மவுலவி முகமது ஜாஃபர் கூறுகையில், '' எத்தனையோ திருமணங்களை நான் நடத்தியிருக்கிறேன். முதன்முறையாக சிவன் கோயிலில் ஒரு நிக்காஹ் செய்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த தகவல் உலகம் பூராவும் பரவ வேண்டும். எங்களைப் போன்று உலக மக்கள் சமாதானத்துடன் வாழவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் ஒற்றுமையை இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்'' எனக் கூறியுள்ளார்.

மணப்பெண் நிரஷோவுக்கோ, கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. 'லவ்' ஜெயித்தது என்கிறார் . ஒவ்வொரு ஆண்டும் எங்கள் திருமண நாள் கொண்டாட்டம் இந்த சிவன் கோயிலில்தான் என்கிறார் காதலில் ஜெயித்த மகிழ்ச்சியில்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-