அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மும்பை: ஏடிஎம் கார்டு மோசடியை தடுக்க கைரேகை அல்லது கருவிழி ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட கார்டு பரிவர்த்தனை வசதியை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 32 லட்சம் வங்கி ஏடிஎம் டெபிட் கார்டுகளில் தகவல் திருட்டு நடந்த சம்பவம் கடந்த வாரம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. இதை தடுக்க பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் கார்டு பின் நம்பரை மாற்ற வேண்டும் என வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில், ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பேமன்ட் வங்கிகள் என அனைத்தும், தங்களது ஏடிஎம்களில், ஆதாருடன் ஒருங்கிணைக்கப்பட்ட கார்டு பரிவர்த்தனைக்கு வகை செய்ய வேண்டும். இந்த புதிய தொழில்நுட்ப வசதியை 2017 ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஏற்படுத்தலாம்’’ என்று கேட்டுக்கொண்டது.

முன்னதாக, 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி செயல் குழுவுக்கு தலைமை வகித்த சிட்டி வங்கி மற்றும் ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி தொழில்நுட்ப பிரிவு முன்னாள் தலைவர் கவுரி முகர்ஜி, ஏடிஎம் டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் பாதுகாப்பு அம்சத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனையை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் கார்டு பரிவர்த்தனையின்போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாவதால், மோசடிகளுக்கு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பு, மோசடிகளை தடுக்கும் மற்றொரு உத்தியாக, புதிதாக வழங்கும் கார்டுகளில் சிப் பொருத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. சிப், பின் நம்பர் மற்றும் பயோமெட்ரிக் இணைந்த பரிவர்த்தனையை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அப்போது இதை செயல்படுத்துவதற்கான இறுதி கெடு விதிக்கப்படவில்லை. இருப்பினும் வரும் ஜனவரியில் இருந்து பயோமெட்ரிக்குடன் இணைந்த கார்டு பரிவர்த்தனை அமலாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதன்படி கடைகளில் கார்டு பரிவர்த்தனை, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தல் போன்றவற்றுக்கு பயோமெட்ரிக் முறையில் ஒப்புதல் பெற, அதாவது வாடிக்கையாளரின் கைரேகை அல்லது கண் கருவிழி படலம் ஸ்கேன் செய்வதன் மூலம் அனுமதி அளிக்க வழிவகை ஏற்படும்.

ஆனால் கைரேகை அல்லது கருவிழி இரண்டும் பயன்படுத்தப்படுமா அல்லது ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்படுமா என்பது பற்றிய முறையான அறிவிப்போ, வழிகாட்டுதல் நெறிமுறைகளோ எதுவும் வெளியாகவில்லை. ஏற்கெனவே பின் நம்பர் மற்றும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

பயோமெட்ரிக் முறையிலான பரிவர்த்தனை அமலுக்கு வந்தால் மோசடி நடப்பதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், சில வங்கி ஏடிஎம்களில்தான் கைரேகை பதிவு வசதியுடைய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. புதிய முறை அமலானால் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களையும் இதற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதன்பிறகே இந்த முறை முழுமையான அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

வங்கிகளுக்கு கூடுதல் செலவு

ஏடிஎம்கள் தவிர, கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கார்டு மூலம் பணம் செலுத்த பயன்படும் பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் நிறுவ, ஒரு கருவிக்கு சுமார் ₹8,000 முதல் ₹12,000 வரை ஆகிறது என விசா நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இவற்றை பராமரிக்க ஆண்டுக்கு சராசரியாக ₹3,000 முதல் ₹4,000 வரை ஆகிறது. நாடு முழுவதும் சுமார் 13 கோடி பிஓஎஸ் கருவிகள் உள்ளன. பயோமெட்ரிக் பரிவர்த்தனைக்காக ஏடிஎம்களுடன் இவற்றையும் நவீனமாக்க வேண்டும் என்பதால் வங்கிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும். ஏற்கெனவே செலவை கட்டுப்படுத்த இலவச ஏடிஎம் பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பண புழக்கம் குறையும்

மத்திய அரசு கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த கார்டு பரிவர்த்தனை, இணைய வங்கி சேவை ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது. ஏற்கெனவே கார்டு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பயோமெட்ரிக்குடன் இணைந்த பரிவர்த்தனை இதை மேலும் ஊக்குவிக்கும். இதனால் பாதுகாப்பு பலப்படுவது மட்டுமின்றி கருப்பு பண பரிவர்த்தனையும் வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-