அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சென்னை மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, காவேரிராஜபுரம், திருவாலங்காடு, பொதட்டூர்பேட்டை, பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் கடந்த மாதம் வேகமாக பரவியது.

இந்த நோயின் தாக்குதலுக்கு யஸ்வந்த், சுகன், யுவராஜ் உள்பட 13 குழந்தைகள் அடுத்தடுத்து பலியானார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தற்போதைய சூழ்நிலையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் திருவள்ளூர், திருத்தணி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

14 பேர் இறந்தும் தூங்கும் சுகாதாரத்துறை: சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் மர்ம காய்ச்சல் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், திருத்தணியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த லதாஞ்சலி(16) டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இது சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சுகாதாரத்துறையினர் ஒரு வாரம் மட்டுமே வேகமாக செயல்பட்டனர். அதன்பின்னர் வழக்கம்போல அலுவலகத்திலேயே முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெங்கு பாதிப்ைப ஒப்புக் கொண்ட சென்னை மருத்துவமனை: வடசென்னையைச் சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை கடந்த சில நாட்களாக சென்னை அரசு பொதுமருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யவில்லை. ஆனால், அவர்கள் குணமான பிறகே, அவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அப்போதே சென்னையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


அடுத்தடுத்து அனுமதி; அடுத்தடுத்து இறப்பு: பம்மல் அடுத்த பொழிச்சலூர் லட்சுமிநகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் முகமது இத்திரீஸ். இவரது மனைவி சவுதா பேகம். இவர்களது குழந்தைகள் பாஹீமா(8), முகமது(4). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பாஹீமா 3ம் வகுப்பும், முகமது எல்கேஜியும் படித்து வந்தனர். இருவரும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இருவரையும் அவரது தந்தை முகமது இத்திரீஸ் பொழிச்சலூரில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், 5 நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இருவரையும் கடந்த வியாழக்கிழமை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் இல்லை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முகமது நேற்று முன்தினம் மாலை 6.20 மணிக்கு உயிரிழந்தார். இதை தொடர்ந்து, முகமதின் அக்கா பாஹீமா நள்ளிரவு 11.20 மணிக்கு உயிரிழந்தார். அடுத்தடுத்து இரு குழந்தைகளும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்ததால் அவர்களது பெற்றோர் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதே போல், மதுரவாயல் ஆலப்பாக்கம் கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி.

மனைவி சரிதா. ஆரோக்கிய சாமி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் லட்சிகா ஏஞ்சல்(6) காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் குணமடையாத காரணத்தால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி லட்சிதா ஏஞ்சலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, செஞ்சியை சேர்ந்த கிருத்திகா(12) இதய நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கிருத்திகாவும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு, குழந்தைகள் நல மருத்துவமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் 4 பேர் உயிரிழந்தது சென்னை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, பொழிச்சலூர் லட்சுமிநகர் கண்ணகி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி மர்ம காய்ச்சலால் உயிரிழந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று காலை முதல் 500க்கும் மேற்பட்டோர் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சுகாதார பணிகளை விரைந்து முடிக்கும் படி சுகாதார பணியாளர்களை கேட்டுக்கொண்டார். மேலும், பொழிச்சலூர் பகுதியை சுற்றி தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குழுவினர் முகாம் அமைத்து அப்பகுதி முழுவதும் மருத்துவ சோதனை நடத்தி மருந்து, மாத்திரைகள் அளித்தனர். மேலும், நில வேம்பு கசாயங்களை அளித்தனர். இதற்கிடையே,உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அவசர அவசரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, பொழிச்சலூரில் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு பிற்பகல் 12 மணியளவில் பாஹிமா மற்றும் முகமது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

மர்ம காய்ச்சலால் உயிரிழந்த பாஹீமாவின் சித்தப்பா ரபீக் கூறியதாவது: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாஹீமா, முகமதுக்கு உடல்நிலை சரியாகவில்லை. கடுமையான காய்ச்சல் தொடர்ந்து இருந்தது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து சென்றோம். ஆனால், 2 மணி நேரம் குழந்தைகளை அனுமதிக்காமல் அலைக்கழித்தனர். அனுமதித்த பிறகும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதனால், தான் குழந்தைகள் இறந்துள்ளனர். முகமது மாலை 4 மணிக்கும், பாகிமா இரவு 8.30 மணிக்கும் இறந்துவிட்டனர். ஆனால், அவர்கள் இறப்பு குறித்து எதுவும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி இரவு 11.30 மணிக்கு தான் தெரிவித்தனர் என்றார்.

* நாடு முழுவதும் டெங்கு பரவி வருவது குறித்து தேசிய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பிரிவு புதிய தகவல் ஒன்றை ஆகஸ்ட் 31ல் வெளியிட்டுள்ளது.

* 12,255 பேர் நாடு முழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயால் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

* கர்நாடகாவில் அதிகபட்சமாக 8,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் டெங்குவால் மட்டும் 1,150பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-