அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.


மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அறிகுறிகள் :

மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.

மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.

மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.

சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.

சுயபரிசோதனை:-

பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி இருந்து வலி இல்லை என்றாலும் அபாயமே. அதனால் அவர்களும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மேமோகிராஃபி:-

மேமோகிராஃபி என்று அழைக்கப்படும் முலை ஊடு கதிர்ப் படம். மேமோகிராஃபி இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மேல் மார்பகத்தை வைக்க வேண்டும். அந்த மார்பகத்தின் மீது ஒரு அழுத்தும் கருவி வைக்கப்படும். மார்பகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாக அறிய முடியும்.
பல்வேறு கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய வேண்டும். இந்த முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு வேதனை அதிக அளவில் இருக்கும். இதனால், பல பெண்கள் மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்து அதைத் தவிர்ப்பார்கள்.

நவீன மேமோகிராஃபி பரிசோதனை:-

மேமோகிராஃபி இயந்திரம் நவீனமாகிவிட்டது. மார்பகத்தை வைக்கும் தட்டு அப்படியே இருக்கும். ஆனால், முன்பைப்போல அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை இல்லை. அதற்குப் பதில் ஊடு கதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் மார்பில் செலுத்தி மார்பின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காண முடிகிறது. இதில் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஊடு கதிர்களால் ஆபத்து விளையுமோ என்று அச்சப்படத் தேவை இல்லை. இந்த ஊடு கதிர்களின் அபாயத்தன்மை மிக மிகக் குறைவு. மேலும், இந்தப் பரிசோதனை முழுக்க முழுக்கப் பெண்களாலே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியம் இல்லை. வெளிநாடுகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, அனைத்துப் பெண்களுமே மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்கிறார்கள். அதனால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால், அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன.

'ஒவ்வொரு பெண்ணும் மார்பகப் புற்று நோய் கண்டு அறியும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்பது பல்வேறு நாடுகளின் தேசிய மருத்துவக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த நாடுகளின் அனைத்துப் பெண்களுக்கும் இது கட்டாயம்.

புற்று நோய்க்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் உறுதி. தாமதமாகக் கண்டறியும் பட்சத்தில், முதலில் மார்பகத்தை எடுக்க வேண்டி வரும். அப்போதும் எலும்புகள் வரை புற்று நோய் பரவி இருந்தால், உயிர் பிழைப்பது கடினம்!

ஒரு பக்கத்தின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கத்தின் மார்பகத்திலும் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களுக்கு இந்த நோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்பார்கள். இதனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிட முடியும். தேவைப்பட்டால் மட்டுமே, மேமோகிராஃபி மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, 40 வயதுக்கு மேலான பெண்களுக்குத்தான் இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, திருமணம் முடித்த பெண்கள் சுய பரிசோதனையை, மாதம் ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். வயதான பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானதும், மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதிலிருந்து தப்புவதற்கான வழியும் ஆகும்.

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க :

30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும்.

உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.

மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங் களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும்.

தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தாலே, அவர்கள் அதிவிரைவாகப் பூப்பெய்துவதை தவிர்க்க முடியும்.

மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்டசூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வீட்டிலேயே மசாலாப் பொருட்களைத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் யோகா, தியானம் செய்வது உடலை ஃபிட்டாகவும், ஹார்மோன்களை சீராக சுரக்கவும் வைக்கும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-