அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

பெரம்பலூர்: மானாவாரிப் பயிர்களுக்கு வந்த மாபெரும் சோதனையால் 2015ல் கனமழையாலும், 2016ல் மழையின்றியும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், மானாவாரி பயிர் சாகுபடியை நம்பியுள்ள 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணற்றுப்பாசன விவசாயிகளைக் கொண்ட மாவட்டமாகும்.

மக்காச் சோளம், பருத்தி, சின்னவெங்காயம் ஆகியவை பெரம்பலூர் மாவட்டத்தில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்காச்சோளம் 1.30லட்சம் ஏக்கரிலும், பருத்தி 55ஆயிரம் ஏக்கரிலும், சின்னவெங்காயம் 13ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய 3 பயிர்களிலும் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம், தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையோடு, வடகிழக்குப் பருவமழையும் சேர்ந்து தாக்கியதால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தனர். வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவு 475மிமீ. பெய்ததோ 528மிமீ. ஆண்டு சராசரி 908. ஆனால் பெய்ததோ 1,109மிமீட்டர். குறிப்பாக ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்து, தண்ணீர் தேங்கியதால் பருத்தியில் வேரழுகல் நோய் தாக்கியது.

சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மக்காச்சோளப் பயிர்கள் ஒடிந்தும், சாய்ந்தும் போனதோடு, கதிர்கள் முற்றாமல் போனது, முற்றிய கதிர்கள் முளைவிட்டன. தொடர் மழைக்கு சின்னவெங்காயம் 60 நாளிலும் 15 நாள் பயிராகவே முற்றாமல் இருந்தது. இதனால் பயிர் பாதிப்புகள் குறித்து வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்திய கூட்டாய்வில் 1,27,407 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த மக்காச் சோளத்தில் 70 சதவீதத்திற்கென 90,150 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம் பாதிக்கப்பட்டது.

அதேபோல் 50,343 ஏக்கர் பரப்பளவில், சாகுபடி செய்திருந்த பருத்தியில் 98 சதவீதத்திற்கென 49,150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு மிக அதிகமாகப் பெய்து கெடுத்த பருவமழை, 2016ம்ஆண்டு பெய்யாமலே பெருமளவு மக்காச்சோளம், பருத்தி பயிர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

குறிப்பாக நடப்பாண்டு ஆவணி மாதத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்களும், ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட பருத்திப் பயிர்களும் தென்மேற்குப் பருவமழை குறிப்பிட்ட அளவுக்குப் பெய்யாத காரணத்தால் வளர்ச்சி குன்றியும், மழையில்லாததால் பயிர்கள் கருகியும் பாதித்துள்ளன. குறிப்பாக மக்காச்சோள பயிர்களில் கதிர்களே வராமல், காய்ந்து வருகிறது.

இதனால் ஏக்கருக்கு 30 மூட்டையாவது பெற்றுவந்த விவசாயிகள் தற்போது ஐந்து மூட்டைகளை அறுவடை செய்வதே முடியாத நிலையுள்ளது, இதனால் மனமுடைந்த விவசாயிகள் பலரும் டிராக்டரைக் கொண்டு மக்காச்சோள வயல்களை உழுது, மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட வயலை சீரமைத்து வருகின்றனர். வேப்பந்தட்டை, வேப்பூர், பெரம்பலூர் தாலு காக்களில் இதன் பாதிப்பு கடுமையாக உள்ளது. இதனால் கடந்தாண்டு வெள்ள நிவாரணம் கோரிய விவசாயிகள் நடப்பாண்டு வறட்சி நிவாரணம் கோரும் நிலைதான் உள்ளது.

பருத்திச் செடிகளில் இளமையில் முதுமை என்பதுபோல், சின்னச் செடியிலேயே பூக்கள் பூத்துள்ளதால் காய்கள் சிறுத்து, மகசூல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வயலில் தேங்கிய தண்ணீரால் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பருத்திச் செடிகள் நடப்பாண்டு தண்ணீரைக் காணாமலேயே தவித்து வருகின்றன. சின்ன வெங்காயமும் தண்ணீரின்றி காய்ந்து வெம்பி வருகிறது. இதனால் கடந்த ஆண்டைப்போல் நடப்பாண்டும், வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை அலுவ லர்களைக் கொண்ட குழு அமைத்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவர்க ளால் சேகரிக்கப்படும் பாதிப்பு விபரங்களைக் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசிடமிருந்து வறட்சி நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும் என பூலாம்பாடி திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் வரதராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏமாற்றிய பருவமழை

ஜூன் 42மிமீ, ஜூலை 48மிமீ, ஆகஸ்டு 95மிமீ, செப்டம்பர் 129மிமீ என தென் மேற்குப் பருவமழை பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 314மிமீ அளவிற்குப் பெய்திருக்க வேண்டும். கடந்த 2015ல் 316.16மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டு 242மிமீ அளவு மட்டுமே பதிவாகியுள்ளது. அதுவும் விதைப்புப் பட்டங்களான ஆடி, ஆவணி மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றிவிட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-